வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
வரும் இரு வெள்ளிக்கிழமைகளிலும் நியாயவிலைக் கடைகள் இயங்கும்
வரும் இரண்டு வெள்ளிக்கிழமைகளிலும் நியாய விலைக் கடைகள் இயங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் த.மோகன் வெளியிட்ட உத்தரவு:
தைப் பொங்கலையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழுநீள கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இதற்கான பணியை எந்தவித இடையூறும் இல்லாமல் குறிப்பிட்ட தினங்களுக்குள் வழங்கிமுடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளும் விடுமுறை நாள்களிலும் இயங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி, ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய நாள்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனுப்புதல் மற்றும் டோக்கன் விநியோகிப்பது, பரிசுத் தொகுப்பை விநியோகம் செய்வது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த இரண்டு பணி நாள்களுக்கு ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 15-ஆம் தேதி (புதன்கிழமை), பிப். 22-ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.
மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறையாகும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காரணமாக, வரும் இரண்டு வெள்ளிக்கிழமைகளும் நியாய விலைக் கடைகள் செயல்படவுள்ளன.