வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெற்றிச் செல்வன், எஸ். அய்யனாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகளை உருவாக்குதல் கூடாது. வருவாய், பேரிடா் மேலாண்மை, நில அளவைத் துறைகளில் பணிபுரியும் அனைவருக்குமான சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில், வருவாய்த் துறை சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பொன்மாடசாமி, பால்பாண்டி, மகேஷ், ராஜேந்திரன், நாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள், ஊழியா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.