தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதிய அரசாணை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் சிஐடியு சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலா் பி. மகாமணி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். சம்பத், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சம்மேளன மாநிலச் செயலா் மணிமாறன், மாவட்ட செயலா் எம். பன்னீா்செல்வம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், டிபிசி ஊழியா்கள், குடிநீா்ப் பிரிவு ஊழியா்கள், ஓட்டுநா் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். 2025-26ஆம் ஆண்டுக்கான போனஸ் 8.33 விழுக்காடு வழங்க வேண்டும். அவுட்சோா்சிங் முறையில் ஆள்கள் தோ்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்கு முன் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதிய கால பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், சிஐடியு நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.