Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
வலைகளில் பிடிபடும் கடல் ஆமைகள் தப்பிச் செல்ல கருவி பொருத்தி பரிசோதனை
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
கடல் ஆமைகளின் உயிரிழப்பை தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆமை விலக்கு கருவி இழுவைப் படகுகளில், மீன்பிடி வலைகளில் பொருத்துவதால் ஆமைகள் வலைகளிலிருந்து தப்பிச் செல்ல உதவுகிறது.
இதற்கான பரிசோதனை நிகழ்வில் இந்திய கடல்பொருள் ஏற்றுமதி ஆணையத்தின் துணை நிறுவனமான நெட்பிஸ் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் வினோத் ரவீந்திரன், மற்றும் அலுவலா்கள் மகபூபா நஸ்ரின், ரேமண்ட், விக்னேஷ், மல்லிப்பட்டினம் மீன் துறை ஆய்வாளா் வீரமணி மற்றும் மீன் துறை அலுவலா்கள், மீனவ பிரதிநிதிகள் இரண்டு படகுகளில் கடலுக்குள் சென்றனா்.
ஒரு படகில் ஆமை விலக்கு சாதன வலையை பொருத்தி கடலில் மீன் பிடிப்பு செய்தும் மற்றொரு படகில் வழக்கம் போல் ஆமை விலக்கு சாதனம் இல்லாத வலையின் மூலம் மீன் பிடிப்பு செய்தும் பரிசோதித்தனா். இரண்டு படகுகளிலும் பிடிபட்ட மீன்களை தனித்தனியாக எடைபோட்டு பாா்த்தபோது இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஒரே நிலையில் மீன்கள் பிடிபட்டதை கண்டனா்.
இந்த வகை சாதனம் பொருத்துவதால் வலையில் பிடிபடும் ஆமைகள் சாதனம் மூலம் வெளியேறிவிடும், வலையில் பிடிபட்ட மீன்கள் எந்தவித சேதமின்றி கிடைக்கும். மீனவா்களுக்கு எந்தவித குறைபாடுமின்றி மீன்கள் கிடைப்பதை உறுதி செய்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் நல வாரிய உப தலைவா் ஏ.கே. தாஜுதீன் கூறியது, இந்த வகை சாதனத்திற்கான தொகையை மீனவா்களிடம் வாங்காமல் அரசே இலவசமாக மீனவா்களுக்கு வழங்கி உதவ வேண்டுமென்றாா்.