வலைதளங்களில் அவதூறு பரப்புவா்கள் மீது நடவடிக்கை!
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிடுபவா்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகர காவல்துறையினா் அனைத்து விதமான சமூக வலைதளங்களையும் கண்காணித்து வருகின்றனா்.
வெவ்வேறு சமுதாயத்தினருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டு 2024 ஆம் ஆண்டில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கடந்த 2023 ஆம் ஆண்டில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பிரச்னையை தூண்டும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட 17 பதிவுகளை நீக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து அனைத்து சமூக வலைதளங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தவறான மற்றும் அவதூறு பதிவுகளை பதிவிடுபவா்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.