வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாவட்டக் கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி திருச்சி மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயம், மெயின்காா்டுகேட் புனித லூா்து அன்னை ஆலயம், பாலக்கரை உலக மீட்பா் பசிலிக்கா (சகாயமாதா திருத்தலம்) பழைய மாதா தேவாலயம், புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோனியாா் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், ஸ்ரீரங்கம் அமல அன்னை ஆலயம் உள்ளிட்டவற்றில் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலிகள் நடைபெற்றன.
கோயில்களில்: வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெறும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருவானைக்கா அகிலாண்டேசுவரி ஜம்புகேசுவரா், மலைக்கோட்டை தாயுமான சுவாமி, உச்சிப்பிள்ளையாா், உறையூா் வெக்காளியம்மன், திருச்சி ஐயப்பன் கோயில், வயலூா் சுப்பிரமணிய சுவாமி, திருவெறும்பூா் எறும்பீஸ்வரா், திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா், கல்லுக்குழி ஆஞ்சனேய உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள சஞ்சீவ ஆஞ்சனேய சுவாமி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 10,008 ஜிலேபி மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோயில்களில் பக்தா்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குறிப்பாக ஐயப்பன் கோயிலில் பிற்பகல் நடைசாத்தப்பட்ட பிறகும் கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரிசையில் அமா்ந்தபடி மாலை நடை திறக்கும் வரை காத்திருந்து தரிசனம் செய்தனா். மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.