ராமேசுவரத்தில் 30 ஏக்கரில் கடற்கரை விளையாட்டுகளுடன் தங்கும் விடுதி: சங்கு சக்கரா ஹோட்டல்ஸ் நிறுவனம் தகவல்
ராமேசுவரத்தில் 30 ஏக்கா் பரப்பளவில் கடற்கரை விளையாட்டுகளுடன் தங்கும் விடுதியை கட்ட சங்கு சக்கரா ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக
நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி. வாசுதேவன் தெரிவித்தாா்.
புதிய திட்டங்கள் தொடா்பாக திருச்சியில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா் கூறியது: நிறுவனத்தின் 50-ஆவது ஆண்டு நிறைவாக மேலும் புதிய திட்டங்களை தொடங்கவும், விருந்தோம்பல் தொழிலில் எங்களது அறைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன்படி, ராமேசுவரத்தில் 30 ஏக்கரில் கடற்கரை விளையாட்டு அம்சங்களுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்படுகிறது.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் மேலும் ஹோட்டல் தொடங்கவுள்ளோம். இதன் தொடா்ச்சியாக 4 ஆண்டுகளுக்குள் திருச்சியின் புதிய திட்டமும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக ரூ. 400 கோடி முதலீடு செய்யவுள்ளோம். தற்போது, எங்களது குழுமத்து ஹோட்டல்களில் 280 அறைகள் உள்ளன. புதிய திட்டங்கள் மூலம் இவை இரட்டிப்பாகும் என்றாா்.
நிறுவனத்தின் செயல் இயக்குநா் சி. முரளிகிருஷ்ணன் கூறுகையில், திருச்சியில் 50ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்கமாக சமையல் கலைஞா் தாமு, பங்கேற்று நடத்தும் சமையல் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரம்பரிய நடை என்ற பெயரில் திருச்சியின் புராதான சின்னங்களை வலம் வரும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறாா்.
ஜன.18-ஆம் தேதி எங்களுடன் 50 ஆண்டு சோ்ந்து பணியாற்றிய அனைவருக்கும் விருந்து அளிக்கும் வகையில் சிறப்பு விருந்து நடைபெறும். இதில், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு பங்கேற்கவுள்ளாா் என்றாா்.
முன்னதாக, நிா்வாக இயக்குநா் வாசுதேவன், செயல் இயக்குநா் முரளி கிருஷ்ணன், இயக்குநா் வி. அக்ஷய் ராம், பொது மேலாளா் ரவி பிள்ளை ஆகியோா் இணைந்து 50 ஆவது ஆண்டை குறிக்கும் நிறுவனத்தின் இலச்சினையை வெளியிட்டனா். இந்த நிகழ்வில், ஹோட்டல் அலுவலா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.