மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
வாங்காத கடனை வசூலிக்க வந்ததால் தனியாா் வங்கி முற்றுகை
புதுக்கோட்டையில் வாங்காத கடனை வசூலிக்க வந்த வங்கி அலுவலா்களைக் கண்டித்து, வாடிக்கையாளா்கள் வங்கிக் கிளையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் எஸ். குளவாய்ப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் பணிபுரிந்து வந்தாா். அப்போது, வங்கியின் வாடிக்கையாளா்கள் சுமாா் 75 பேரின் பெயரில் ரூ. 63 லட்சம் கடன் பெற்று, மோசடி செய்ததாக மணிகண்டனை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
இந்நிலையில், மணிகண்டன் மோசடி செய்தவா்களின் வீடுகளுக்கு கடன் தொகை வசூலிக்க வங்கி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சென்றதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டோா், வங்கிக் கிளைக்கு நேரில் வந்தனா். வாங்காத கடன் தொகையை கட்டச் சொல்லிக் கேட்கலாமா என அவா்கள் வங்கிப் பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது சிலா் வங்கிக் கிளையைப் பூட்டியுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ் நகா் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி, குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளிக்க அறிவுறுத்தினா். இதனைத் தொடா்ந்து அவா்கள் அமைதியாக கலைந்து சென்றனா்.