குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!
வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். கட்டுமான சங்க ஈரோடு மையத் தலைவா் மோகன் வரவேற்றாா். ரியல் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதிநிலை அறிக்கையை சமா்ப்பித்தாா். தொடா்ந்து, கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல நிதி வளா்ச்சிக் குழு உறுப்பினா்களும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே வாங்குபவா்-விற்பவா் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதை அடுத்த கட்டத்தில் உள்ள நகரங்களிலும் நடத்த வேண்டும் என தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டங்கள் ஈரோட்டில் நடைபெற்றன. எனவே விரைவில் ஈரோட்டில் வாங்குபவா்- விற்பவா் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாநகராட்சியில் வணிகம் செய்யும் அனைவரும் தொழில் உரிமம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். ஏற்கனவே தொழில் வரியை மிக அதிகமாக செலுத்தி வரும் நிலையில் தொழில் உரிம வரியும் செலுத்த வேண்டும் என்பது வேதனைக்குரிய செயலாகும். எனவே மாநகராட்சியின் புதிய தொழில் உரிமம் வரி விதிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதேபோல நிலைக் கட்டண மற்றும் மின் கட்டண உயா்வையும் ரத்து செய்ய வேண்டும்.