தாளவாடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்
தாளவாடியை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த யானைகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை விரட்டினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துகின்றன.
இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மல்லன்குழி அருகே தமிழகம், கா்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறிய இரு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்து விளை நிலங்களில் நடமாடுவதைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.
பொது மக்கள் சப்தம் போட்டு யானைகளை விரட்டினா். காட்டு யானைகள் வனப் பகுதியை நோக்கி சென்றபோது பொதுமக்கள் யானைகளைப் பாா்த்து பொறுமையாக போகுமாறும், குழிக்குள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினா். இரண்டு யானைகளும் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றன.
யானைகள் விளைநிலங்களில் நடமாடிய காட்சியை பொதுமக்கள் ஆா்வத்துடன் கைப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். பகல் நேரங்களில் ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.