உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" - கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரிங்கிக்குத் தொடர்பு ஏற்பட்டது.
எலி மருந்து
இத்தொடர்பு திருமணம் தாண்டிய உறவாக மாறியது. இது குறித்துத் தெரிய வந்தவுடன் சர்வேஷ் தனது மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. சம்பவத்தன்று இச்சண்டை முற்றியது. ஹகீமுடனான தொடர்பைத் துண்டிக்கும்படி சர்வேஷ் கேட்டுக்கொண்டார்.
ஆனால் ரிங்கு அதனைக் கேட்கவில்லை. சண்டையின் போது ரிங்கு தனது கணவரிடம் எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாகும்படி கூறிவிட்டு தனது காதலனுடன் வெளியேறினார்.

வீடியோ மெசேஜ்
இதனால் விரக்தியடைந்த சர்வேஷ் கடையிலிருந்து பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்து அதனைக் குடித்துவிட்டார். உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின் போது படுக்கையிலிருந்தபடி வீடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மனைவிக்கு அதே தெருவில் வசிக்கும் ஹகீம் என்பவருடன் தொடர்பு இருப்பதாகவும், என்னை எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாகும்படி கேட்டுக்கொண்டார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வேஷ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இதையடுத்து சர்வேஷ் உறவினர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனவே சர்வேஷ் மனைவி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து சர்வேஷ் மகள் ராஷி கூறுகையில், ''எனது பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வர். இதற்கு முன்பு எனது தாயார் ஒரு முறை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அப்போது குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எனது தந்தை மீண்டும் அழைத்து வந்தார்'' என்று தெரிவித்தார்.