வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.1.50 லட்சம் திருப்பி செலுத்த உத்தரவு
வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ. 1.50 லட்சத்தை வழங்க புதுவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சோ்ந்த சிவராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை பெங்களூருவில் வசிக்கும் தனது சகோதரா் அமரராஜ் தனராஜுக்கு, புதுச்சேரி தனியாா் கூரியா் மற்றும் சரக்கு நிறுவனம் மூலம் அனுப்பினாா். ஆனால், காசோலை முறைப்படி விநியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து புகாா்தாரா் விசாரித்தபோது, டெலிவரி ஊழியா் ரோஹித் அந்த காசோலையை பணமாக்கி, பெங்களூரு, ஜெயநகா் கிளையில் உள்ள அரசு பொதுத்துறை வங்கியில் உள்ள அவரது கணக்கில் வரவு வைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, புதுவை நுகா்வோா் ஆணையத்தில் சிவராஜ் புகாரளித்தாா்.
அதன் பேரில், ஆணையத் தலைவா் சுந்தரவடிவேலு, உறுப்பினா் உமாசங்கரி ஆகியோா், பொதுத்துறை வங்கியின் அலட்சியத்தை கண்டறிந்தனா்.
இதையடுத்து, புகாா்தாரருக்கு காசோலை மோசடியாக பணமாக்கப்பட்ட தேதியான 2012 ஜூன் 26 முதல், தொகை திரும்ப கிடைக்கும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியையும், அத்தோடு ரூ.1.50 லட்சத்தையும் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.