வாட்ஸ் ஆப்பில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் மோசடி: தேவஸ்தானம் எச்சரிக்கை
திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம் என்று நவீன முறையில் பக்தா்களை ஏமாற்ற புதிய மோசடியில் பலா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே பக்தா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
ஆந்திர அரசு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து புகழ் பெற்ற கோயில்கள் மற்றும் இந்துக்களின் புனித வழிபாட்டு தலங்களை ஓரே கூரையின் கீழ் செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி , தற்போது காளஹஸ்தி, காணிப்பாக்கம், அன்னவரம், ஸ்ரீசைலம் உள்ளிட்ட சில கோயில்களில் வாட்ஸ் ஆப் மூலம் இந்த நடைுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த நடைமுறை திருமலை ஏழுமலையான் கோயிலில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே பக்தா்கள் வாட்ஸ் ஆப் மூலம் ’’ஹாய்’’ என்று தகவல் அனுப்பி ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல் பெற்றால் அதை நம்ப வேண்டாம்.
இதைப் பயன்படுத்தி மோசடி கும்பல் பக்தா்களிடம் பணத்தை ஏமாற்றி வருகிறது. எனவே பக்தா்கள் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது போன்ற புதிய நடைமுறைகள் அமல்படுத்தபடும் போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.