கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக...
வாணியம்பாடி: பெண் குழந்தையைக் கடத்த முயற்சி? வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில், வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்திருக்கிறார். திடீரென அந்த நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தம்பிதுரை என்பவரின் 3 வயது மகள் தனுஷ்ஸ்ரீயின் வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்து கடத்திச்செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்ததும், விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த கிராம மக்கள் சிலர் ஓடிவந்து வடமாநில நபரைப் பிடித்து குழந்தையை மீட்டிருக்கின்றனர். பிறகு, அவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கின்றனர். இது குறித்து தகவலறிந்ததும், அங்கு விரைந்து சென்ற அம்பலூர் காவல் நிலையப் போலீஸார் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டனர்.

விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரங்கீலா எனத் தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசியதால், ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீஸாரே அந்த நபரை ஏற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்த பொதுமக்கள், காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்ததையடுத்து, ரயில்வே போலீஸாரின் உதவியுடன் அந்த நபர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பொது மக்கள் தாக்கியதில் அவர் உடம்பில் காயங்கள் இருந்ததால், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.