தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற ...
மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்
பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார்.
அவர்கள் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடு ஒன்றில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று பாபு மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அவருடன் இருந்த துரு ஷா தன்னிடம் இருந்த கத்தியால் பாபுவை சரமாரியாகக் குத்தினார்.

அதோடு பாபுவின் உடம்பில் வயரால் கட்டிவிட்டு துரு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். சம்பவ இடத்திலேயே பாபு இறந்து போனார். அதிகாலையில் பாபு இறந்து கிடந்ததைப் பார்த்து தெருநாய்கள் குரைக்க ஆரம்பித்தன.
இதனால் உள்ளூர் மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாபு கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
உடனே அவர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பாபுவை கொலை செய்த துரு ஷாவை சில மணி நேரத்தில் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோதுதான் அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,
"அளவுக்கு அதிகமான போதை மற்றும் முன்பகையால் இப்படுகொலை நடந்திருக்கிறது" என்று தெரிவித்தனர்.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாபு தனது 17 வயதில் ரயில் நிலையத்திற்கு அருகில் நிலக்கரி விற்றுக்கொண்டிருந்தபோது அவரை இயக்குனர் நாகராஜ் பார்த்து அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாபு மொபைல் திருட்டு, வழிப்பறி போன்ற சிறிய குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்" என்று தெரிவித்தனர்.