டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
வானத்தை அளந்த இந்திய பெண் - வானிலை அறிவியலில் புரட்சி செய்த அன்னா மணி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஓசோன் ஓட்டை அரசியல் மொழியாகவும் தலைப்புச் செய்தியாகவும் மாறுவதற்கு முன்பே கேரளாவைச் சார்ந்த பெண் இயற்பியலாளர் அன்னா மணி காதி ஆடையில் புனேயின் வானத்தை அமைதியாக அளந்தவர்.
1960ஆம் ஆண்டுகளில் புனேயில் அமைந்துள்ள இந்திய வானிலை துறை ஆய்வகத்தின் மேல் தளத்திற்கு சென்று கண்ணாடிக் குழாய்கள், வினைவிப்படிய எக்கி (டெப்ளான் பம்பு) போன்றவற்றை வைத்து தானே வடிவமைத்த கருவிகளைக் கொண்டு மனித செயல்களால் உலகில் குறைந்து வரும் ஓசோன் மற்றும் உயர்ந்து வரும் மாசு போன்ற மாற்றமடைந்து வந்த வளிமண்டல தடயங்களை பதிவு செய்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூடுபனியும் ஏலக்காயும் சூழ்ந்த பீர்மேட்டு மலையில் பிறந்த அன்னா மணி அப்போதைய காலகட்டத்தில் ஆணாதிக்கம் கொண்டு அறிவியல் நிறுவனங்களில் போராடி தன்னை அறிவியலாளராக நிலை நிறுத்திக் கொண்டார்.
அந்த்ரோபோசீன் (அண்மை மாந்த மண்ணியல்) என்ற சொல் உருவாகும் முன்னரே வானத்தின் ஓசோன் மற்றும் மின்னியல் மாறுபாடுகளை பதிவு செய்த அன்னாமணி நகரமயமாதலை முன்னேற்றத்தின் அடையாளமாக கருதாமல் வான் வேதியியலை சீர்குலைக்கும் சக்தியாகவே பார்த்தார்.
1957 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புனே தலைமையகத்தில் அன்னா மணி பணியில் சேரும்போது விவரித்துரைக்கும் வடிவில் இருந்த வானியல் ஆய்வுகளை துல்லிய அளவீடுகள் கொண்டு முறைப்படுத்தினார். கண்ணாடி மற்றும் வினைவிப்படியத்தால் நுண்ணிய கலன் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஓசோன் செறிவறி மிதவை (ஓசோன்சோண்ட்) ஊதுபையை (பலூனை) இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் 1964-ஆம் ஆண்டு அன்னாமணி மேற்பார்வையில் பறக்க விட்டது. இந்த ஊதுபை (பலூன்) தக்காண பீடபூமியின் 30கி.மீ உயரத்தை எட்டிய போது வெடித்தது.

ஊதுபை (பலூன்) வெடிக்கும் வரை வானத்தில் மேலெழும்பியபோது ஓசோன் அளவு கூர்மையாக அதிகரித்ததது. இந்த அறிவியல் ஆராய்ச்சியை தனது கடமையாக கருதிய அன்னா மணி இந்த ஆராய்ச்சி தந்த தரவுகளால் உற்சாகமடைந்தார்.
இந்த தகவல் இந்தியாவின் முதல் செங்குத்து ஓசோன் முன்குறிப்பு விவரமாக பதிவு செய்யப்பட்டது. இந்த முன் குறிப்பு விவரம் உலக வானிலை அமைப்பின் உலகளாவிய ஓசோன் சார்பிடல் (மேப்பிங்) முயற்சிக்கு பெரிதும் உதவியது. இந்த ஓசோன் செறிவறி மிதவை ஆராய்ச்சியே புனேயை காலநிலை கண்காணிப்பு வலையமைப்பின் முக்கிய முனையமாக மாற்றியது.
வளிமண்டல மேலடுக்கு அளவீடுகளில் மட்டுமே திருப்தி அடையாத அன்னா மணி தரை மட்ட ஓசோனைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஹைட்ரோகார்பன்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளால் உருவாகும் பைங்குடில் வாயுவின் தாக்கம் உள்ள வெப்பவளிமண்டல (ட்ரோபோஸ்பெரிக்) ஓசோனை அளக்க துவங்கினார்.
ஹைட்ரோ கார்பன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களால் உண்டாகும் சங்கிலித் தொடர் எதிர்வினைகள் காலநிலை வேதியியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற நவீன கால ஆராய்ச்சி கருத்துக்களை 1960-ஆம் ஆண்டுகளிலேயே தனது ஆராய்ச்சி அறிக்கைகளில் அன்னா மணி குறிப்பிட்டுள்ளார். புனேயின் தொழிற்சாலை பகுதி காற்றின் அளவீடுகளை சுத்தமான கடல் காற்றின் அளவீடுகளுடன் ஒப்பிட்டு நகர்ப்புற மாசுபாடு வளிமண்டல கடத்துத்திறனை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்ததாகக் கண்டறிந்தார்.

2000 ஆண்டு வரை பெயரிடப்படாத அண்மை மாந்த மண்ணியல் துறைக்கு இவரது வரைபடங்கள் சமன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி புத்தகங்கள் போன்ற இவரது இலக்கியங்கள் இந்திய கால வரிசை சான்றுகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது வளிமண்டல தடயங்களை பதிவு செய்ய ஐரோப்பிய நாடுகளில் அந்த நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மசகு எண்ணெய் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பெரும்பாலும் பிழைகளை ஏற்படுத்தின.
ஓசோனுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிந்த மசகு எண்ணெய் வளிமண்டல தடயங்களை பதிவு செய்வதில் பிழைகளை ஏற்படுத்தியது. குழாய்கள், வினைவிப்படிய எக்கி போன்ற வினைத்திறன் இல்லாத பொருட்களைப் பயன்படுத்தி இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட அன்னா மணியின் தொழில்நுட்பம் இந்த குறைபாட்டை நீக்கியது. துல்லியமான அளவீடுகளில் கடுமை காட்டிய அன்னா மணி அதற்காக நேர்த்தியான சமரசமற்ற கருவிகளை உருவாக்கி புரட்சி ஏற்படுத்தினார்.
அளவீட்டின் துல்லியம் இயற்கையை புரிந்து கொள்ளும் அடித்தளம் என்று கூறிய அன்னா மணி தனது ஆய்வகத்தை சுத்தமாகவும் ஆய்வக கருவிகளை சரியான பராமரிப்புடனும் நிர்வகித்து வந்தார். புனே ஆய்வகத்தின் அன்னா மணி அறைச் சுவரில் நேர்த்தியான எழுத்துக்களில் எழுதப்பட்ட "உங்களால் முடியும், ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்ற வாக்கியம் அளவீடு என்பது ஒரு இயந்திரத்தனமில்லாத தத்துவார்த்தமான தார்மீகச் செயல் என்ற அவரது குறிக்கோளை நமக்கு உணர்த்துகிறது.
1970 ஆம் ஆண்டில் அன்னா மணியின் தலைமையில் புனேயில் இந்திய தேசிய ஓசோன் மையம் உருவாக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின் இந்த மையம் ஆசிய பிராந்திய ஓசோன் மையமாக மாறியது. புனேயிலிருந்து கொடைக்கானல், திருவனந்தபுரம் மற்றும் பிற தொலைநோக்கி மையங்களின் தரவுகளைப் பெற்று, ஒருங்கிணைத்து அயன மண்டல ஓசோன் போக்கினை வரைபடமாக்க உதவினார்.

மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி புனேயின் ஈரப்பதம், வெப்பநிலை, பருவமழை போன்றவற்றில் ஏற்படுத்திய மாற்றங்களை கவனித்த அன்னா மணி நகர்ப்புற தூசியும் தொழில்துறை புகையும் கதிர்வீச்சு அளவீடுகளில் ஏற்படுத்திய தாக்கங்களை எண்ணி வருந்தினார். நகரமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கிடையிலான ஒப்புமையை கூறிய முதல் இந்திய விஞ்ஞானியான அன்னா மணி இரவில் அதிகரிக்கும் வெப்பம் காலம் தவறிய பருவமழை தொடக்கம் ஆகியவை தொழில்துறை மாசுடன் தொடர்புடையது என அவரது ஆய்வு குறிப்புகளில் கூறியுள்ளார்
2001 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அன்னா மணி இறந்தபின் தொலைக்காட்சியில் இரங்கல் செய்திகள் எதுவும் இல்லை, அவரது பெயரில் விருதுகள் இல்லை, அவரின் மரபு என கூச்சலிடும் சீடர்களும் இல்லை. தெளிவு வழங்கும் அறிவியல் சின்னங்களாக ஆய்வுக் குறிப்புகளையும் கருவிகளையும் நமக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



















