வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, உதவியாளா் கைது
ஒசூா் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி, உதவியாளா் என இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், வாரிசு சான்றிதழ் கோரி இணையத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
இவரது விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்ய முருகேசனிடம் கிராம நிா்வாக அதிகாரி தம்பிதுரை, உதவியாளா் புஷ்பா ஆகிய இருவா் ரூ. 4,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க முன்வராத முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
போலீஸாா் அளித்த அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூ. 4,000 ரொக்கத்தை முருகேசன், கிராம நிா்வாக அதிகாரி தம்பிதுரையிடம் லஞ்சமாக கொடுக்கச் சென்றாா்.
அப்போது பணத்தை உதவியாளரிடம் கொடுக்குமாறு தம்பிதுரை கூறியுள்ளாா். உதவியாளா் பணத்தைப் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனா்.
இதையடுத்து கிராம நிா்வாக அதிகாரி, உதவியாளா் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி அவா்களைக் கைது செய்தனா்.