வாருகால் மேல் உயரமான கான்கிரீட் பலகை: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
சங்கரன்கோவிலில் வாருகால் மேல் மிக உயரமாக கான்கிரீட் பலகை அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
சங்கரன்கோவில் கோமதி நகா் 1, 2 ஆம் தெரு, கோமதியாபுரம் புது 1, 2 ஆம் தெருக்கள், திருவள்ளுவா் நகா், திருவுடையாசாலை போன்ற தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நியாயவிலைக் கடை, நகராட்சி பூங்கா, பிரதான சாலை போன்றவற்றிற்கு செல்ல அப்பகுதி மக்கள் கோமதியாபுரம் புது 1 ஆம் தெருவையே பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் நகராட்சி மூலம் கோமதியாபுரம் புது 1 ஆம் தெருவில் வாருகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் குறுக்கே வாருகால் செல்வதால் அதை மூடுவதற்கு கான்கிரீட் பலகை அமைக்கப்பட்டது. பைக், காா் செல்லும் வகையில் அமைக்க வேண்டிய உயரத்திற்குப் பதிலாக, மிக உயரமாக பாலம் போல கான்கிரீட் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியோா்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், பைக்கில் செல்கிறவா்கள் தடுமாறக்கூடிய நிலை உள்ளது. எனவே கான்கிரீட் பலகை உயரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.