செய்திகள் :

விகடன் இணையதள முடக்கம் : அரசியலமைப்பை மீறிய பாசிச நடவடிக்கை - The Wire சிறப்புக் கட்டுரை!

post image
விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் இணையதளம் முடக்கம் தொடர்பாக பலரும் மத்திய பாஜக அரசுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தி வயர் இணையதளத்தில் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பாஜக அரசின் இந்த செயல்பாடு குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவர் எழுதிய அக்கட்டுரையின் தமிழாக்கம் இனி...!
கவிதா முரளிதரன்

பத்திரிகைகளின் விமர்சனக் குரலை மௌனப்படுத்தும் போக்கு!

விகடன் இணையதளத்தை முடக்கும் வகையில் மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் கண்டனத்தை பெற்றிருக்கிறது. நூறாண்டு பாரம்பரியம் கொண்ட ஒரு பத்திரிகை மீது முறையான நோட்டீஸ் வழங்காமல், அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிக்காமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை பத்திரிகைகளின் விமர்சனக் குரலை மௌனப்படுத்தும் போக்காகவே கருதப்படுகிறது.

டெனால்ட் ட்ரம்பின் அருகே கை மற்றும் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பதை போன்ற கார்ட்டூனை விகடன் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் விகடன் பிரசுரித்த அந்த கார்ட்டூனுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்தே விகடன் தளத்தை பயன்படுத்த முடியாமல் போனது.

இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ''கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.

இதுசம்பந்தமாக தி வயர் இணையதளத்திடம் பேசிய பத்திரிகையாளர் மற்றும் தி இந்து குழும இயக்குனர் என்.ராம் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், 'ஒன்றிய அரசு செய்திருப்பது முழுக்க முழுக்க சட்டத்துக்குப் புறம்பான செயல். இது பெருத்த கவலையை அளிக்கிறது. பல்லாயிரம் வாசகர்கள் தாமாக முன்வந்து திடீரென எங்களால் விகடன் இணையதளத்தை படிக்க முடியவில்லை என புகாரளித்து வருகின்றனர். ஒன்றிய அரசுதான் இந்த முடக்க நடவடிக்கைக்கு பின்னால் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. விகடனின் டிஜிட்டல் இதழில் வெளியிடப்பட்ட கார்ட்டூன்தான் இதற்கு காரணம் என்பதும் வெட்ட வெளிச்சமே. விகடன் ப்ளஸ் இதழ் சப்ஸ்க்ரைபர்களுக்கு மட்டுமே என டிஜிட்டலில் வெளியாகும் இதழ். பிரதமர் அமெரிக்காவுக்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த கார்ட்டூனை விகடன் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து மனிதாபிமானற்ற முறையில் சங்கிலி கட்டப்பட்டு இராணுவ விமானத்தில் இந்தியர்களை அமெரிக்க இராணுவம் அழைத்து வருகிறது. இந்திய அரசும் பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் மௌனம் சாதித்தே வருகின்றனர். இந்த இரண்டையும் தொடர்புப்படுத்திதான் அந்த கார்ட்டூனை வரைந்திருக்கிறார்கள்.

என்.ராம்

வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் முன்பாக பேச்சுவார்த்தைக்காக பிரதமர் மோடி அமர்ந்திருக்கையில் அவரின் கை கட்டப்பட்டிருப்பதை போன்ற குறியீடான சித்தரிப்புதான் அது. விமர்சனப் பார்வையோடு கேலியையும் நையாண்டித்தனத்தையும் உள்ளடக்கிய முறையான ஊடக அறத்துடனேயே அந்த கார்ட்டூன் இருந்தது.' என என்.ராம் ஆதங்கத்தோடு கூறுகிறார்.

சமூகவலைதளங்களில் அதன் பயனாளர்கள் மத்தியில் இந்த கார்ட்டூன் பெருவாரியாக சென்று சேர்ந்திருக்கிறது. அதேநேரத்தில் அந்த கார்ட்டூன் தமிழக பா.ஜ.கவையும் கடுமையாக உஷ்ணப்படுத்தியிருக்கிறது. X தளத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விகடனை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதாவது, பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலும் அவரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் உன்னத நோக்கத்துக்கு தீங்கிழைக்கும் வகையிலும் விகடன் இதழ் ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறது. இது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிகளை மீறிய செயல் எனக் கூறி தகவல் தொடர்புத்துறை அமைச்சர் எல்.முருகனுக்கும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருப்பதை X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

விகடன் விளக்கம்

இன்னொரு பக்கம் விகடன் தரப்பில் அவர்களின் இணையதளம் முடக்கப்பட்டதை பற்றி ஒரு விளக்க அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், 'விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.

Vikatan For Freedom Of Expression

நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.' எனக் கூறப்பட்டிருந்தது.

விகடனின் நூறாண்டு வரலாற்றில்..!

இந்த முடக்க நடவடிக்கையில் வெளிப்படையற்ற அரசின் நடவடிக்கைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.ரவிக்குமார் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு எழுதியிருக்கும் கடிதம் மிக முக்கியமானது. அதில், 'உரிய விளக்கம் இல்லாமல் விகடன் தளம் முடக்கப்பட்டது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை குலைக்கும் வேலை' என்பதை குறிப்பிட்டிருக்கும் ரவிக்குமார், 'விகடன் தளத்தை முடக்கும் உத்தரவை மத்திய அரசு வழங்கியதா என்பதில் தெளிவான விளக்கம் தேவை, சட்டப்பிரிவு 69 A யின் படி எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்காமலும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை உறுதிப்படுத்தாமலும் ஒரு கருத்தை முடக்க முடியாது. மத்திய அரசு இதில் வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.' எனக் கூறியிருந்தார்.

ஊடக சுதந்திரம்

விகடனின் நூறாண்டு வரலாற்றில் இதே மாதிரியான ஒரு சம்பவம் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. அதைப் பற்றி நினைவு கூறும் என்.ராம், '1987 இல் விகடனின் அப்போதைய தைரியமிக்க ஆசிரியர் மற்றும் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருந்தார். சில எம்.எல்.ஏக்களை திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் சித்தரித்து அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கும். அதற்காக பாலசுப்பிரமணியன் இரண்டு நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். கொதித்தெழுந்த பத்திரிகையாளர்கள் வீதியில் இறங்கி போராடவே அவர் விடுவிக்கப்பட்டார். அந்த சமயத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றமும் அந்த கைதை சட்டத்துக்குப் புறம்பானது என தீர்ப்பு கூறி பத்திரிகை சுதந்திரத்தை காத்தது.

தமிழக வரலாற்றில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான விவகாரங்களில் அந்த தீர்ப்பு ஒரு மைல்கல். இந்த முறை சூழ்நிலை வேறாக இருக்கிறது. ஆனாலும் பிரச்சனை ஒன்றுதான். ஊடகங்களை தணிக்கை செய்து சட்டவிரோதமாக முடக்கி கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க பார்க்கின்றனர். அந்த கார்ட்டூன் வெளியாகி 5 நாட்கள் கழித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு ஒரு புகாரை அளிக்கிறார். அதன்பிறகு எதுவுமே முறையாக நடக்கவில்லை. முடக்கத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. பதிப்பாளருக்கு எந்த நோட்டீஸூம் வழங்கப்படவில்லை. சட்டப்பிரிவு 19(2) நியாயமான முடக்க நடவடிக்கைக்கான காரணங்களை அடுக்கியிருக்கிறது. அதனைக் குறிப்பிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எதையும் முறையாக கடைபிடிக்காமல் பல வாசகர்கள் படிக்கும் விகடன் தளத்தை மொத்தமாக முடக்கியிருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மீறிய இந்த நடவடிக்கை நூறாண்டு கடந்த மதிப்புமிக்க ஒரு பத்திரிகையின் மீது ஏவப்பட்ட அநீதியான பழிவாங்கும் நடவடிக்கையே.

விகடன் நிறுவனம் 1926 இல் தொடக்கப்பட்டது. தமிழ் பத்திரிகை உலகில் மிக முக்கியமான இடத்தை விகடன் தன்னகத்தே கொண்டிருக்கிறது. திடீரென எந்த விளக்கமும் இல்லாமல் அவர்களின் டிஜிட்டல் தளங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் அரசின் தணிக்கை நடவடிக்கை மற்றும் டிஜிட்டல் வெளியில் சுருங்கி வரும் கருத்துச்சுதந்திரத்தையும் பற்றிய எச்சரிக்கை மணியை சொடுக்கியிருக்கிறது.

பல்வேறு தளங்களிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மிக முக்கிய கட்சிகளுள் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இதை 'பாசிச தன்மை' என விமர்சித்து பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அவர்களின் சகிப்பற்றத்தன்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சிவில் உரிமைகள் அமைப்புகள் என பல தரப்பினரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர்.

கவிதா முரளிதரன்

இதுசம்பந்தமாக நம்மிடம் மேலும் பேசிய பத்திரிகையாளர் என்.ராம், 'இதை அவ்வளவு சாதாரணமான முடக்க நடவடிக்கையாக பார்க்க முடியாது. டிஜிட்டல் செய்திகளை வெளிப்படையற்ற நடவடிக்கையால் முடக்கியதன் மூலம் கருத்துச்சுதந்திரத்தையும் மக்களின் தகவல் அறியும் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர். எல்லா சேதாரங்களையும் செய்துவிட்ட பிறகு பிப்ரவரி 16 ஆம் தேதி விகடனுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மூலம் ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. பத்திரிகையில் வெளியான சில கருத்துகளை முடக்க எங்களுக்கு கோரிக்கை வந்ததென அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021இன் படி அமைக்கப்பட்ட துறைரீதியான கமிட்டி முன்பு பிப்ரவரி 17 ஆம் தேதி ஆஜராகி தங்கள் தரப்பில் ஏதேனும் கருத்துகளும் விளக்கங்களும் இருந்தால் தெரியப்படுத்தலாம்.' எனக் கூறியிருக்கின்றனர்.

'முதலில் தண்டனையை வழங்கிவிட்டு, பின்னர் தீர்ப்பை எழுதுவோம்.' என்பதைப் போல மத்திய அரசின் செயல்பாடுகள் இருப்பதாக என்.ராம் குற்றம்சாட்டுகிறார்.

பா.ஜ.க தலைவரின் புகாரின் பேரில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை ஒருவரின் அரசியல் அபிலாஷைகளுக்கு அரசின் அதிகாரத்தை ஒன்றிப் போக செய்வதாக இருப்பதாக விமர்சகர்கள் கருத்தை முன்வைக்கின்றனர். விகடன் இணையதள முடக்கத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினரும் பத்திரிகையாளர் சங்கங்களும் கூறியிருக்கின்றனர். 'நீங்கள் முன்வைக்கும் கருத்து ஒருவருக்கு உகந்ததாக இல்லையெனில், உங்களால் எந்த ஊடக நிறுவனத்தின் டிஜிட்டல் தளத்தையுல் வலுவிழக்க செய்ய முடியும் என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது.

நீதிமன்றத்தில் அவர்களால் இந்தக் கருத்தை மறுக்கமுடியும். ஆனால், அப்படி மறுக்கும்பட்சத்தில் ஒரு நபர் புகாரளித்த அதே சமயத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் அந்தத் தளத்தை படிக்க முடியாமல் போன தற்செயல் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை அவர்கள் விளக்குவது ரொம்பவே கடினமாக இருக்கும்.' என தீர்க்கமாக பேசி முடித்தார் பத்திரிகையாளர் என்.ராம்”

Thanks : The Wire

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்... மேலும் பார்க்க

Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி : `சாட்சியளிக்க வராமல் புறக்கணித்த விவரங்கள்' - ஆதாரத்தோடு ED வழங்கிய புதிய மனு

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளை ப... மேலும் பார்க்க

டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன ... மேலும் பார்க்க