தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ...
டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன நிலையில் புதிய முதல்வர் பதவியேற்பது தாமதமாகிக்கொண்டிருந்தது. பிரதமரின் வெளிநாட்டுப்பயணத்தை தொடர்ந்து இத்தாமதம் ஏற்பட்டது. நேற்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் டெல்லி பா.ஜ.க சட்டமன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமாக டெல்லி சாலிமர் பாக் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா புதிய சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரேகா குப்தா டெல்லியில் மூன்று முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இதனை டெல்லி பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ரேகா குப்தா தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சென்று டெல்லி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவர் நாளை காலையில் 11 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் 6 அமைச்சர்களுடன் புதிய முதல்வராக பதவியேற்கிறார். டெல்லிக்கு புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தாவிற்கு முன்னாள் முதல்வர் அதிஷி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 1998ம் ஆண்டு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 52 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்ஷித் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். பின்னர் அர்விந்த் கெஜ்ரிவாலும், அதனை தொடர்ந்து கடைசியாக அதிஷியும் முதல்வராக இருந்தனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 48 தொகுதியிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடைபெறும் பதவியேற்பு விழாவில் 50 பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், 20 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களும் இப்பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். பதவியேற்பு விழாவில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க டெல்லியில் நாளை ஆட்சி அமைக்கிறது.