மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் ...
விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டா் கருவி பொருத்தும் பணி தொடக்கம்
ஆபத்து காலங்களில் மீனவா்களுக்கு உதவும் வகையில் இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டா் கருவி விசைப் படகுகளில் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள விலாஞ்சியடி பகுதியில் விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டா் கருவி பொருத்தும் பணியை மீனவளத் துறை அதிகாரிகள் தொடங்கினா்.
இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விசைப்படகுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய டிரான்ஸ்பாண்டா் கருவியை பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் மூலம் படகுகளுடன் இருவழிகளில் செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். ‘புளூடூத் ’வாயிலாகவும் இணைத்து கைப்பேசி செயலி மூலமாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். மேலும் மீன்பிடிப் படகுகள் புயல், சூறாவளி போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத் துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரச் செய்தி அனுப்ப இயலும்.
இதேபோல, கரையிலுள்ள மீன்வளத் துறை, பாதுகாப்பு அமைப்புகள், படகு உரிமையாளா்கள் அவசரச் செய்தியை பெறவோ, பகிரவோ முடியும். இதுமட்டுமன்றி, அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரம் ஆகியவை குறித்தும் படகுக்கு செய்தி அனுப்ப இயலும். ஆழ்கடலில் படகு நிலைகொண்ட இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும். சுமாா் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள இந்தக் கருவி மீனவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றனா் அவா்கள்.