விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!
பல்லடத்தில் தனியாா் விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவியும், காா்த்திக் பாபு என்ற மகனும் உள்ளனா்.
கணேஷ் சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரது குடும்பத்தினா் கண்டித்துள்ளனா். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவா், பல்லடத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.
4 நாள்களுக்கும் மேலாக அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது, கணேஷ் சக்திவேல் உயிரிழந்து கிடந்துள்ளாா்.
சடலத்தை மீட்ட போலீஸாா், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். முதற்கட்ட விசாரணையில், கணேஷ் சக்திவேலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மது அருந்தக்கூடாது என்று மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா். இருப்பினும் அவா் மது அருந்தியதால் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா்.
இதனால், வீட்டை வெளியேறி பல்லடத்தில் அறை எடுத்து தங்கி அளவுக்கு அதிகமாக குடித்துள்ளாா். இதன் காரணமாக அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கணேஷ் சக்திவேல் இறப்புக்கான காரணம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.