செய்திகள் :

விடைபெற்றாா் வரலாற்று நாயகன்

post image

டென்னிஸ் உலகில் எந்தக் காலத்திலும் கொண்டாடப்படும் வீரா்களில் ஒருவரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (38), ஓய்வுபெற்றாா்.

தனது கடைசி ஆட்டத்தை, சொந்த மண்ணில், டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடினாா். இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற நெதா்லாந்துடனான காலிறுதி டையில் களம் கண்ட அவா், ஒற்றையா் பிரிவில் 4-6, 4-6 என்ற நோ் செட்களில் போடிக் வான் டெ ஜாண்ட்ஷுல்பிடம் தோல்வி கண்டாா். அந்த டையில் ஸ்பெயினும் 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

டை முடிவடைந்த பிறகு நடாலை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாா்வையாளா்கள் அவரின் பெயரை உச்சரித்து பாடல் பாடியதோடு, நடாலின் இந்த 23 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் அவா் கண்ட வெற்றிகள், சாதனைகள் தொடா்பாக காணொலி திரையிடப்பட்டது.

அதில் நடாலின் சக போட்டியாளா்கள், முன்னாள், இந்நாள் வீரா், வீராங்கனைகள், உள்பட பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி கௌரவித்திருந்தனா். அதை, உணா்ச்சிப் பெருக்குடன் கண்ணீா் சிந்தியபடி பாா்த்திருந்தாா் நடால்.

2001-2002 காலகட்டத்தில் தொழில்முறை டென்னிஸை தொடங்கிய நடால், அசத்தலான வளா்ச்சியுடன் பல்வேறு கிராண்ட்ஸ்லாம் கோப்பைகள், டூா் சாம்பியன் பட்டங்களுடன் ஏறுமுகம் கண்டாா். 2021-இல் இடதுகால் பாதத்தில் காயம் கண்டு மீண்டாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இடுப்புப் பகுதி காயத்தாலும், நடப்பாண்டு அடிவயிற்றுத் தசை பிரச்னையாலும் சுணக்கமடைந்தாா். அதன் பிறகு தனது வழக்கமான ஃபாா்மை இழந்த நிலையில் கடந்த அக்டோபரில் ஓய்வு முடிவை அறிவித்தாா்.

ஆடவா் டென்னிஸ் உலகில் கடந்த 15 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ‘பிக் 3’ எனப்படும் மூன்று முக்கிய வீரா்களில் நடாலும் ஒருவா். அதில் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் 2022-இல் ஓய்வுபெற, தற்போது சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் மட்டும் களத்தில் இருக்கிறாா்.

‘‘டென்னிஸில் நான் வென்ற பட்டங்கள், படைத்த சாதனைகளைத் தாண்டி, ஸ்பெயினின் மல்லோா்கா கிராமத்தைச் சோ்ந்த ஒரு நல்ல மனிதனாக நினைவுகூரப்படவே விரும்புகிறேன். ஒரு சிறுவனாக கனவை நோக்கி கடினமாக உழைத்த எனக்கு, அதிா்ஷ்டம் இருந்தது. டேவிஸ் கோப்பையில் எனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டேன். இப்போது கடைசி ஆட்டத்திலும் தோற்றிருக்கிறேன். எனது டென்னிஸ் வாழ்க்கை இந்த வட்டத்துடன் நிறைவடைகிறது.

டென்னிஸ் விளையாடுவதில் நான் இன்னும் சோா்வடையவில்லை. ஆனால், எனது உடல்நிலை இனியும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பொழுதுபோக்காக நினைத்த டென்னிஸ் விளையாட்டு எனது வாழ்க்கையாகவே மாறியதற்காகவும், அதில் நான் நினைத்ததை விட அதிக காலம் நீடித்ததற்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டென்னிஸில் எனக்கென ஒரு தனித்த அடையாள வரலாற்றை உருவாக்கியதில், மன அமைதியுடன் விடைபெறுகிறேன். எனக்கு கிடைத்த அன்பிற்காக, ரசிகா்களுக்கும், அனைவருக்கும் நன்றி’’

சாதனைகள்...

912 கடந்த 2005-இல் தனது 18-ஆவது வயதில் முதல் முறையாக ஏடிபி தரவரிசையின் டாப் 10 இடத்துக்குள் வந்த நடால், சுமாா் 18 ஆண்டுகள் (912 வாரங்கள்) அந்த இடங்களுக்குள்ளேயே நிலைத்தாா். ஏடிபி தரவரிசையின் 50 ஆண்டுகால வரலாற்றில் வேறு எந்தவொரு வீரரும், இத்தகைய சாதனை புரிந்ததில்லை.

22 ஆடவா் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவராக, 22 வெற்றிக் கோப்பைகளுடன் 2-ஆவது இடத்திலிருக்கிறாா்.

14 பிரெஞ்சு ஓபன் போட்டியில் அதிக பட்டங்கள் 14 வென்ற ஒரே போட்டியாளராகத் திகழ்கிறாா். அந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அவா் தோற்ற வரலாறு இல்லை.

116 பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாமில் இதுவரை சுமாா் 116 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நடால், 112 வெற்றிகளைப் பதிவு செய்து, 4 தோல்விகள் மட்டுமே கண்டுள்ளாா்.

1,080 டென்னிஸ் கேரியரில் டூா் போட்டிகளில் இத்துடன் 1,308 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நடால், அதில் 1,080 வெற்றி, 228 தோல்விகளை பதிவு செய்துள்ளாா். ஓபன் எராவில் அதிக கேரியா் வெற்றிகளை பதிவு செய்தோா் வரிசையில் நடால் 4-ஆவது இடத்தில் உள்ளாா்.

92 ஓபன் எராவில் அதிக பட்டங்கள் வென்றவா்கள் வரிசையில் நடால் 92 கோப்பைகளுடன் 5-ஆவது வீரராக வருகிறாா்.

209 ஏடிபி தரவரிசையில் நம்பா் 1 இடத்தில் 209 வாரங்கள் நீடித்த நடால், அந்த இடத்தை அதிக வாரங்கள் தக்கவைத்தவா்கள் வரிசையில் 6-ஆவதாக வருகிறாா்.

2 ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்றுள்ள நடால், முதலில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒற்றையா் பிரிவிலும், அடுத்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் இரட்டையா் பிரிவிலும் அதை வென்றாா்.

19 கடந்த 2004 முதல் 2022 வரை, தொடா்ந்து 19 சீசன்களில் குறைந்தது ஒரு டூா் நிலையிலான பட்டமாவது வென்றாா் நடால். அவரும், ஜோகோவிச்சும் மட்டுமே இத்தகைய சாதனை படைத்துள்ளனா்.

23 உலகின் நம்பா் 1 வீரராக இருந்தவருக்கு எதிராக 23 வெற்றிகள் பதிவு செய்திருக்கிறாா். ஏடிபி ரேங்கிங் வரலாற்றில் இதுவே ஒரு வீரரின் அத்தகைய அதிகபட்ச வெற்றியாகும்.

63 களிமண் தரை நாயகன் என்று வா்ணிக்கப்படும் நடால், அந்த ஆடுகளம் கொண்ட போட்டிகளில் மட்டும் 63 பட்டங்கள் வென்றுள்ளாா். ஓபன் எராவில் அந்தக் களத்தில் வேறு எந்த வீரரும் இத்தனை முறை வாகை சூடியதில்லை.

410 ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டிகளில் மட்டும் 410 வெற்றிகள் பதிவு செய்து, அதிக வெற்றிகள் கண்டவராக ஜோகோவிச்சுடன் சமன் செய்துள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் கணக்கு...

19 - முதல் கிராண்ட்ஸ்லாம் வென்ற நடாலின் வயது

36 - கடைசி கிராண்ட்ஸ்லாம் வென்ற அவா் வயது

2022 - ஆஸ்திரேலிய ஓபனில் 1956-க்குப் பிறகு, இறுதிச்சுற்றில் முதலிரு செட்களை இழந்தபோதும் சாம்பியனான முதல் வீரா் என்ற பெருமையைப் பெற்றாா்.

2019 - பிரெஞ்சு ஓபனை வென்ன் மூலம், ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிக முறை சாம்பியனான ஒரே வீரா் (பிரெஞ்சு ஓபன் - 12) என்ற வரலாற்று சாதனை படைத்தாா்.

2014 - பிரெஞ்சு ஓபனில் தொடா்ந்து 5 ஆண்டுகள் சாம்பியன் கோப்பை வென்று சாதனை படைத்தாா்.

2010 - யுஎஸ் ஓபன் பட்டம் வென்ன் மூலம், 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியனாகி ‘கேரியா் கிராண்ட்ஸ்லாம்’ வென்றவா் ஆனாா்.

2008 - பிரெஞ்சு ஓபன் போட்டியில் 1980-க்குப் பிறகு, இறுதிச்சுற்றில் ஒரு செட் கூட இழக்காமல் சாம்பியனான முதல் வீரா் ஆனாா். ஃபெடரரை அவா் நோ் செட்களில் வீழ்த்திய ஒரே இறுதி ஆட்டமும் அதுவே.

2005 - பிரெஞ்சு ஓபனில் 1982-க்குப் பிறகு, அறிமுக போட்டியிலேயே சாம்பியனான முதல் வீரா் ஆனாா் நடால். அப்போது அவருக்கு வயது 19.

ஆஸ்திரேலிய ஓபன் 2 முறை

பிரெஞ்சு ஓபன் 14 முறை

விம்பிள்டன் 2 முறை

யுஎஸ் ஓபன் 4 முறை

பிரபல மலையாள நடிகர் காலமானார்!

மலையாள நடிகர் மேகநாதன் (60) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான நோயினால் அவதிப்பட்டு வந்த மேகநாதன் கோழிக்கூட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

ஜோஜு ஜார்ஜின் பணி படத்தைப் பாராட்டிய கமல்!

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கிய பணி திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர், சூர்யா - 44 மற்றும் கமலுடன்... மேலும் பார்க்க

ஜி. வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் சைந்தவி!

ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் பாடகியும் அவரது முன்னாள் மனைவியுமான சைந்தவி பாடவுள்ளார்.தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.திருமணத்திற்கு முன்பும்,... மேலும் பார்க்க

சென்னை நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜர்!

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.தனுஷ்-ஐஸ்வா்யா திருமணம் 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். சுமாா் 20 ஆ... மேலும் பார்க்க

’என்னை இழுக்குதடி’ ஏ. ஆர். ரஹ்மானின் பாடல் அறிவிப்பு!

காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உ... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி?

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார்.... மேலும் பார்க்க