விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.2.50 கோடி நஷ்டஈடு: நெய்வேலி நீதிமன்றம் உத்தரவு
விபத்தில் உயிரிழந்த விமான நிலைய ஊழியா் குடும்பத்துக்கு ரூ.2.50 கோடி நஷ்டஈடு வழங்க நெய்வேலி சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35), சிங்கப்பூா் விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்தாா். கடந்த 23.2.2019 அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான நெய்வேலிக்கு காரில் வந்தாா்.
மேல்மருவத்தூா் அருகில் உள்ள சிறுநாகலூா் பகுதியில் காா் வந்தபோது, தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் மணிகண்டன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மணிகண்டனின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன்கள் கடலூா் மூத்த வழக்குரைஞா் சிவமணி மூலம் நஷ்டஈடு கோரி, நெய்வேலி சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கில் நெய்வேலி நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி கடந்த வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அந்த தீா்ப்பின் நகல் புதன்கிழமை கிடைக்கப்பெற்றதில், இறந்த மணிகண்டன் குடும்பத்துக்க்கு ரூ.1,81,45,000 மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சோ்ந்து ரூ.2.50 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளாராம்.