மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
விருதுநகர்: பிறக்கும்போது 680 கிராம் எடை; 76 நாட்கள் தீவிர சிகிச்சை; நலமுடன் வீடு திரும்பிய குழந்தை!
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விருதுநகர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு 6 மாதத்திலேயே பனிக்குடம் உடைந்து, பெண் குழந்தை பிறந்தது.
பிறக்கும் போதே வெறும் 680 கிராம் எடையுடன் ஆபத்தான நிலையிலிருந்த அந்தக் குழந்தை கடந்த 76 நாட்கள் தீவிர பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்றது. இந்நிலையில், இன்று 1 கிலோ 300 கிராம் எடையுடன் நலம் பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜெயசிங் பேசுகையில், “அதிதீவிர சிகிச்சை மற்றும் நவீன மருத்துச் சிகிச்சையின் மூலம், குழந்தையின் உயிரும், நலமும் காக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தொடர் கண்காணிப்பு, சிறப்பான மருத்துவக் குழு, சிறந்த செவிலியர்களின் ஈடுபாடு மற்றும் பெற்றோரின் உறுதி ஆகியவை இந்தச் சிறப்பான முடிவிற்குக் காரணமாக இருந்தது.
இது போன்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளின் திறமை மற்றும் மக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் என்று தாம் உட்பட மருத்துவர்கள் அனைவரும் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும், "தற்போது 24 குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள். இதில் 15 குழந்தைகள் ஒரு கிலோ விற்கும் குறைவான இடையில் இருக்கிறார்கள். இதில் 10 குழந்தைகள் தற்போது ஒரு கிலோவிற்கு மேலும் 5 குழந்தைகள் ஒரு கிலோவிற்குக் குறைவாகவும் இருக்கிறார்கள். அவர்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அனைவருமே நலமுடன் வீடு திரும்புவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மருத்துவக் கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு கூறுகையில், “தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதம் ஒன்றிற்கு 25 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை தாய்ப்பால் வங்கியில் சேமித்து வைக்கப்படுகிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்டு, தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
அக்குழந்தையின் தாய் சத்யா பேசுகையில், “குறை மாதத்தில் குழந்தை பிறந்தபோது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு வாரமாக தாய்ப்பால் கொடுக்காமல் தாய்ப்பால் வங்கிக்குக் கொடுத்தேன். பின்னர் குழந்தைக்குக் கொடுத்தேன்.
76 நாள்கள் தொடர் கண்காணிப்பில் தனது குழந்தைக்கு மருத்துவம் பார்த்து தற்போது நல்ல நிலையில் வீடு திருப்புகிறோம். இதற்காக மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.