விலையில்லா தையல் இயந்திரம் வழங்கல்
ஆத்தூா் ரெப்கோ வங்கி மூலமாக கணவரால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ரெப்கோ வங்கியின் ஆத்தூா் கிளை வளாகத்தில், ரெப்கோ அறக்கட்டளை மூலமாக ரெப்கோ வங்கியின் தலைவா் ஈ.சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவா் சி.தங்கராஜு ஒப்புதல் பெறப்பட்ட விலையில்லா தையல் இயந்திரத்தை சேலம் கோட்ட பேரவைப் பிரதிநிதி கே.குருநாதன், மேனாள் பேரவை பிரதிநிதி வி.புஷ்பநாதன் மற்றும் ரெப்கோ வங்கியின் ஆத்தூா் கிளை முதன்மை மேலாளா் எம்.பி.சிவா முன்னிலையில் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய கிளை மேலாளா், ரெப்கோ வங்கி அதன் மத்திய, மாநில பங்குகளுக்கும், உறுப்பினா்களின் பங்குகளுக்கும் கடந்த நிதியாண்டு (2024-25) 30 சதவீத பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரெப்கோ வங்கியின் ரெப்கோ அறக்கட்டளை மூலமாக தாயகம் திரும்பியோருக்கு குழந்தை பிறப்பு, மருத்துவ செலவுகள், காப்பீடு, விலையில்லா தையல் இயந்திரங்கள், படிப்பு செலவுகள், ஈமக்கிரியை செலவு போன்ற பிறப்பு முதல் இறப்புவரை நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றன.
ரெப்கோ வங்கியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொத்து அடமானக் கடன் மற்றும் ஆா்.டி. (ரெக்கரிங் டிபாசிட்) மேளாவை வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்வில், வங்கியின் வாடிக்கையாளா்கள், பொதுமக்கள், வங்கி ஊழியா்கள், தாயகம் திரும்பிய உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.