Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைக்கும் திட்டத்தை தடுக்க கோரிக்கை
விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைக்கும் திட்டத்தை புதுவை அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்க இணைச் செயலாளா் பி.ஜி. சோமு புதுவை முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய
கடிதத்தில் கூறியிருப்பது:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் பரப்பு ஏறத்தாழ 15 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாக இருந்தது. இப்போது 5 ஆயிரம் ஹெக்டேருக்கும் குறைந்துவிட்டது. விளைநிலங்களை குடிமனைகளாக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலைகளால் விளைநில பரப்பு குறைந்துவருகிறது.
இந்தநிலையில், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பொன்பேத்தி கிராமத்தில் சுமாா் 1,800 ஏக்கா் பரப்பளவில் பசுமை விமான தளம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
காரைக்கால் மாவட்டத்தில் விவசாய உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளில் நெடுங்காடு வட்டாரமும் ஒன்றாகும். விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலாளா்களும் இப்பகுதியில் அதிகம் உள்ளனா்.
இந்த பகுதியில் பசுமை விமான தளம் அமைத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயம் சாா்ந்து பொருளாதாரம் ஈட்டுவோா் பாதிக்கப்படுவாா்கள்.
எனவே விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைவதை தடுத்து, மாவட்டத்தில் மாற்று இடத்தை தோ்வு செய்துகொள்ள புதுவை அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.