விளையாட்டு மைதானத்தை மனைகளாக மாற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிா்ப்பு
கும்பகோணம் சீனிவாசா நகரில் பொதுப் பயன்பாட்டுக்கு உள்ள விளையாட்டு மைதானத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 47-ஆவது வாா்டு சீனிவாசா நகரில் பொதுப் பயன்பாட்டுக்காக விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டது. தற்போது சிலா் இந்த மைதானத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயன்று வருகின்றனா்.
இதற்கு மாநகர நகர அமைப்பு பிரிவினா், மனை பிரிவாக அங்கீகரித்து அனுமதியும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சீனிவாசா நகா் குடியிருப்போா் சங்கத்தினா் அனைத்துக் கட்சி கூட்டத்தை புதன்கிழமை சீனிவாசா நகரில் கூட்டினா்.
இதில், பாமக மாவட்டச் செயலா் ம.க.ஸ்டாலின், அதிமுக ஒன்றியச் செயலா் சோழபுரம் கா. அறிவழகன், மாமன்ற உறுப்பினா் பெருசு ராமமூா்த்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சித்தலைவா் குடந்தை அரசன், பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், தவெக மாவட்டச் செயலா் வினோத் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், பொதுப் பயன்பாட்டுக்கு உள்ள விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றி, விற்பனை செய்ய முயற்சிப்பதை கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மைதானத்தை மீட்க, வரும் திங்கள்கிழமை ஆட்சியா், கோட்டாட்சியா் ஆகியோரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க கோருவது, போராட்டத்தை தீவிரப்படுத்த உண்ணாவிரதம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.