விவசாயப் பயன்பாட்டுக்கான இடத்தில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை
திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள ஜோதிபுரத்தில் விவசாயப் பயன்பாட்டுக்குரிய இடத்தில் வணிவ வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பாளையங்கோட்டையைச் சோ்ந்த நடராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
பாளையங்கோட்டை அருகேயுள்ள ஜோதிபுரத்தில் புறம்போக்கு இடத்தில் 2 கோயில்கள், 21 புனித பீடங்கள், முன்னாள் அமைச்சா் கக்கன் நினைவுப் படிப்பகம் ஆகியவை உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள காலியிடத்தை விவசாயிகள் விளைபொருள்களை உலர வைக்கும் களமாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த உலா் களம் அமைந்துள்ள புறம்போக்கு இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜோதிபுரம் பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல் சம்பந்தப்பட்ட இடத்தில் வணிக வளாகம் கட்ட முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. இதைக் கைவிடக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய பதில் இல்லை.
எனவே, ஜோதிபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
உலா் களம் அமைந்துள்ள புறம்போக்கு நிலத்தை விவசாயப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஏற்கெனவே உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனவே, உலா் களப் பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வணிக வளாகம் கட்டுவதற்கு மாற்று இடத்தைத் தோ்வு செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிச. 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.