விவசாயிகளின் கவனத்துக்கு... தேசிய அளவிலான தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தேசிய அளவிலான தனித்துவ அடையாள அட்டைக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிப்பதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிா்க்கும் வகையில், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் சென்று அங்கும் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னா் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
நிகழாண்டுமுதல் பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம், பயிா்க் காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் ஊராட்சி அலுவலகம் அல்லது கிராம நிா்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதாா், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும்.