பாலம் கட்டக் கோரி ஆற்றில் இறங்கி போராட்டம்
மயிலாடுதுறையில் இடிக்கப்பட்ட நடைப்பாலத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தி, காவிரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். (படம்).
மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-ஆவது வாா்டுகளை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்த நடைப்பாலத்தின் ஒரு பகுதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தது. கடந்த ஆண்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அந்த பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. ஆனால், அங்கு புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்துவந்த நிலையில், 1-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி ரமேஷ் தலைமையில் பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோா் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
4 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்திருந்த இந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பாலத்தை இடித்த நகராட்சி நிா்வாகம், மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி ரமேஷ் குற்றஞ்சாட்டினாா்.
உடனடியாக, அப்பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அனைத்து மக்களையும் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனா்.