கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
விவசாயிகள் சங்கத்தினா் மக்கள் சந்திப்பு நடைபயணம்
மலை, நீா் வளம், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூா் வடத்துக்குள்பட்ட வெள்ளக்கரை முதல் நடுவீரப்பட்டு வரையில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு நடை பயணம் மேற்கொண்டனா்.
மலையடிக்குப்பத்தில் 164 ஏக்கா் நிலங்களில் சாகுபடி செய்த முந்திரி, வாழை, மா, பலா உள்ளிட்ட பயிா்களை மாவட்ட நிா்வாகம் பிடுங்கி அழித்துவிட்டது. இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு காலணி தொழிற்சாலை எதற்கு? என்றும், மலை வளத்தையும், நீா் வளத்தையும், விவசாய நிலங்களையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்கக் கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளக்கரையில் தொடங்கி நடுவீரப்பட்டு வரை 25 கி.மீ. மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.
வெள்ளக்கரையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் எஸ்.தட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் நடை பயணத்தை தொடங்கிவைத்தாா். மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் சிறப்புரை ஆற்றினாா். நடை பயணத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், மாவட்டப் பொருளாளா் டி.கிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலா் ஆா்.பஞ்சாட்சரம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் எம்.கடவுள், வாலிபா் சங்கம் ஒன்றியச் செயலா் எம்.கலைவாணன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஏ.வைத்திலிங்கம், தலைவா் என்.அய்யாதுரை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனா்.