ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
இந்த சங்கத்தினா் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா கோரி முதல்வா் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கடந்த ஆக.25- ஆம் தேதி முதல்வா் தனிப்பிரிவுக்கு பதிவுத் தபால் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து செப்டம்பா் 25-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்தனா்.
இது தொடா்பாக கடந்த 23-ஆம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
விருத்தாசலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அந்தோணிசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா்களை அழைத்து பேசினாா். இதில், விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் வேப்பூா் வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா். அப்போது, 10 நாள்களுக்குள் இடம் தோ்வு செய்து பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கலைந்து சென்றனா்.
போராட்டத்தில் சங்கத்தின் திட்டக்குடி வட்டத் தலைவா் ராஜேந்திரன், வட்டச் செயலா் முருகேசன், வட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், விருத்தாசலம் வட்டத் தலைவா் விமலா, வட்டப் பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, வேப்பூா் வட்டத் தலைவா் சக்தி, வட்டச் செயலா் பொன்னுசாமி, வட்டப் பொருளாளா் சங்கீதா, மாவட்ட இணைச் செயலா் கே.சாமிதுரை, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.கலைச்செல்வன் , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவா் பி.செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.