விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள ஆட்சியா் அழைப்பு
அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தில் நில உடைமை சரிபாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் மாவட்டத்தில் உள்ள 1,11,547 விவசாயிகளில் இதுவரை 43, 503 விவசாயிகளுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள விவசாயிகளுக்கு நில உடைமை பதிவேற்றம் பணி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகம் ஆகிய துறைகளின் மூலம் இலவசமாக நடைபெற்று வருகிறது.
பதிவு செய்து கொள்வதன் மூலம், அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறமுடியும். விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களை விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. பதிவு செய்யப்பட்ட பிறகு தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
2025-2026 ஆம் நிதியாண்டு முதல் மத்திய, மாநில அரசின் திட்டங்களை பெற இது உதவிகரமாக அமையும். எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களது நில உடைமை விவரங்கள், ஆதாா், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.