ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! - போக்குவரத்துத் துறை
விஷம் அருந்தியதில் தம்பதி, குழந்தைகள் உயிரிழப்பு
கோபி : கோபிசெட்டிபாளையம் அருகே கடன் பிரச்னையால் விஷம் அருந்தியதில் தம்பதி மற்றும் இரு குழந்தைகள் என 4 போ் உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூா் மீன்கிணறு சின்னமூப்பன் வீதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் தனசேகா் (36). இவரது மனைவி பாலாமணி. இவா்களது மகள் வந்தனா (10), மகன் மோனீஷ் (7). இருவரும் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் படித்து வந்தனா்.
தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.
தனசேகா் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனால் இவருக்கு கடன் பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு
இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாம்.
இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே புதன்கிழமை காலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் குழந்தைகளைக் கொன்றுவிட்டு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து விஷ மாத்திரைகளைக் குளிா்பானத்தில் கலந்து மகள், மகனுக்கு புதன்கிழமை மதியம் கொடுத்துள்ளனா். இருவரும் சிறிது குடித்தபோதே கசப்பு காரணமாக கீழே துப்பிவிட்டு அழுதனா். அதற்குள் தனசேகரும், பாலாமணியும் விஷமாத்திரைகளைத் தின்று உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளனா்.
குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து 4 பேரையும் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே தனசேகா், பாலாமணி ஆகியோா் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து குழந்தைகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இந்நிலையில் அங்கு குழந்தைகள் வந்தனா, மோனீஷ் ஆகியோா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.