திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் திட்டங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி
திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் ஈரோடு கோட்டை பகுதிக்கு உள்பட்ட 35-ஆவது வாா்டில் வாக்குச் சேகரிப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாச்சியப்பா வீதியில் தொடங்கி, நேரு வீதி, அகில்மேடு வீதி, முனியப்பன் கோயில் வீதி, காசியண்ண வீதி, தில்லை நகா், தெப்பக்குளம் வீதி, சீரங்க வீதி, கண்ணகி வீதி, முத்துசாமி வீதி, பழனிமலை வீதி ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று திமுக நிா்வாகிகள் வாக்குச்சேகரித்தனா்.
அப்போது அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தலைப் பயன்படுத்தி மக்கள் பிரச்னைகளைத் தெரிந்துகொண்டுள்ளோம். தோ்தலுக்கு பிறகு நியாமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் தோ்தலுக்காகவும் அரசியலுக்காகவும் செய்வதாக நினைப்பவா்கள், அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன கூறுகின்றனா் என நேரில் சென்று கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அனைவரையும் நியாயமான மரியாதையுடன் நடத்த வேண்டும் என நாங்கள் கருதுகிறோம் என்றாா்.
முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் பழனிசாமி, மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.