வீடு கட்டுமானப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: நாம் இந்தியா் கட்சி வலியுறுத்தல்
வீடு கட்டத் தேவையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, நாம் இந்தியா் கட்சி நிறுவனத் தலைவா் என்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கை:
மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தும் வரிகள் அரசுகளின் பொதுப்பணி ஒப்பந்தங்கள், உதவித் தொகைகள் மூலம் மக்களிடையே புழக்கத்திற்கு வருகிறது.
மக்களால் அதிக வரி செலுத்தப்படுவதால் பணப்புழக்க மந்த நிலை ஏற்பட்டு தொழில் நலிவடைவதால், வருவாய் குறைகிறது. அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
தொழிற்கூடங்கள், கடைகள், கிடங்குகள், திருமண மண்டபங்கள், பேருந்து பயணங்கள் போன்றவற்றின் சேவை வரிகளையும், வீடு கட்டத் தேவையான கம்பி, சிமெண்ட், மரம், கூரைத் தகடுகள், பைப்புகள் மற்றும் இதர பொருள்களுக்கு 18 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.