'வீடு வாங்கப்போறீங்களா... கட்டப்போறீங்களா?!' - இந்த 3 விஷயங்கள் கட்டாயம்!
வீடு என்பது பெரும்பாலானவர்களின் பெரும் கனவு. பார்த்து பார்த்து வீடு கட்டுவோம் அல்லது வீடு வாங்குவோம். ஆனால், அதற்கு பின்னாலான ஆவணங்களை, சில விஷயங்களை மறந்துவிடுவோம் அல்லது சறுக்கி விடுவோம்.
அது குறித்து தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர் விளக்குகிறார்...
"வீடும், வீட்டின் கட்டமைப்புகளும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆவணங்களை சரி பார்ப்பது, வீடு சம்பந்தமான வரி உள்ளிட்டவற்றைக் கட்டுவது முக்கியம்.
ஒரு நிலம் வாங்கி வீடு கட்டுகிறீர்கள் அல்லது வேறொருவரிடம் இருந்து வீடு வாங்குகிறீர்கள் என்றால் அந்த நிலம் அல்லது வீடு உங்களுக்கு விற்பவரின் பெயரில் தான் இருக்கிறதா, பட்டா அவரின் பெயரில் இருக்கிறதா, அந்த இடத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என்பதை செக் செய்யுங்கள்.

இதை தெரிந்துகொள்ள நீங்கள் தேடி எல்லாம் அலைய வேண்டாம். ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைனில் பார்க்கும்போது பெயர் மட்டும் சரியாக இருக்கிறதா என்று பாராமல் பழைய பட்டா எண், புதிய பட்டா எண், சர்வே எண், நிலத்தின் ஸ்கெட்ச் உள்ளிட்டவைகளை உங்களுக்கு கொடுத்த நகல் பத்திரத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். இதை நீங்கள் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்பே செய்துவிட வேண்டும்.
நிலம் அல்லது வீடு வாங்கியபிறகு, பட்டாவை நம் பெயருக்கு மாற்றிவிட்டு, வில்லங்க சான்றிதழ் போட்டு நம் பெயருக்கு நிலம், பட்டா மாறிவிட்டதா என்று கட்டாயம் பார்த்துவிடுங்கள்.
நிலப்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றை பக்காவாக தயார் செய்து கொள்வது மிக முக்கியம். இந்த மூன்றோடு முதல் பகுதி முடிகிறது.
அடுத்தது, வரிகள்...
யாரிடமிருந்தாவது வீடு வாங்கியிருந்தால் அவர் இதற்கு முன்பு சரியாக வீட்டு வரி செலுத்தியிருக்கிறாரா என்று பார்த்து, அப்படி இல்லை என்றால் அதை அனைத்தையும் செலுத்தி உங்கள் பெயருக்கு மாற்றிவிடுங்கள். புதிதாக வீடு கட்டியிருப்பவர்கள் சொத்து வரி ஆவணங்களுக்கு விண்ணப்பியுங்கள்.
இந்த வீட்டு வரி ஆவணத்தை கொண்டு சென்று தண்ணீர் வரிக்கான ஆவணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அடுத்ததாக மின்சார இணைப்பை உங்கள் பெயருக்கு கொண்டுவர வேண்டும். இந்த மூன்றையும் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும்.
இந்த மூன்று முடிந்ததும் பிளான்கள்...

ஸ்ட்ரக்சுரல், எலெக்ட்ரிக்கல், பிளம்பிங், ஸ்டார்ம் வாட்டர் டிரையின் வரைப்படங்களை புதிய வீடுகளுக்கு இன்ஜினீயரிடம் இருந்தும், வீடு வாங்கியிருந்தால் அதன் முன்னாள் உரிமையாளரிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஸ்ட்ரக்சுரல் வரைப்படம் மூலம் எங்கு கம்பிகள் உள்ளது. எது எங்கு உள்ளது என்பது தெரிந்துகொள்ளலாம். வீட்டை சுற்றி எவ்வளவு இடம் இருக்கிறது, செடி, கொடிகளை வளர்க்கலாமா என்பதை பிளான் செய்ய இது பெரிய உதவியாக இருக்கும்.
எலெக்ட்ரிக்கல் வரைப்படம் மூலம் எந்த கேரியர் எதில் இணைக்கப்பட்டிருக்கிறது, எது வழியாக மின்சாரம் செல்கிறது, எங்கெல்லாம் வையரிங் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள உதவும். இதை நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழலாம். கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வீட்டில் எதிர்காலத்தில் எதாவது வயரிங் சம்பந்தமான வேலை செய்வதாக இருந்தால் இது பெரிதும் உதவும். ஷார்ட் சர்க்யூட் நடந்தால்கூட, அதை சரிசெய்ய இந்த வரைப்படம் மிகவும் உதவும்.
பிளம்பிங் வரைப்படம்... உதாரணத்திற்கு பாத்ரூம் சுவற்றில் துளையிட வேண்டுமென்றால் பைப்பின் உயரம், பைப் எங்கிருக்கிறது என்பது தெரிந்தால் தான் துளையிட எளிதாக இருக்கும். அதற்கு பிளம்பிங் வரைப்படம் தேவை. பைப்பில் எதாவது அடைப்பு ஏற்பட்டால் கூட, அதற்கு இந்த வரைப்படம் பெரிதும் உதவும்.
ஸ்டார்ம் வாட்டர் டிரைன் வரைப்படம்... எது வழியாக தண்ணீர் சென்று தண்ணீர் வடிகிறது, தண்ணீர் எங்கே சேமிப்பாகிறது, அது போதுமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
சம்ப் எத்தனை அடி உயரம், எவ்வளவு அகலம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையாகும் நேரங்களில் நீங்கள் எத்தனை லீட்டர் லாரி தண்ணீர் வாங்க வேண்டும் என்று சரியாக அளவிட்டு வாங்கி ஊற்ற ஏதுவாக இருக்கும்" என்று கூறினார்.