வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள் திருட்டு
காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவா் தாஷப்பிரகாஷ். எலெக்டிரீஷியன். இவா் தீபாவளியையொட்டி, மேல்மலையனூா் கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 35 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 35,000, 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது தொடா்பாக தாஷப்பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.