வீட்டில் எந்தெந்த அறை எப்படி, எத்தனை அடியில் இருக்க வேண்டும்? - சொந்த வீடு கட்ட நிபுணர் டிப்ஸ்!
வீடு கட்டுவது முடிவாகிவிட்டது என்றால் அடுத்தது என்ன பிளானிங் தான்.
ஒவ்வொரு அறையும் இப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து முடிவுகளை செய்வோம். இந்த முடிவுகளை நீங்கள் எளிதாக எடுக்க நிபுணரின் டிப்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
இதோ உங்களுக்கான டிப்ஸ்களை வழங்குகிறார் ரியல் எஸ்டேட் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.
"வீடு ஒன்று தான். ஆனால், அறைகள் பல. ஒவ்வொரு அறையும் வெவ்வேறு பயன்பாட்டிற்கானது. அதனால், அதற்கேற்ப அறைகளை அமைக்க வேண்டும். அது எப்படி என ஒவ்வொரு அறையாக பார்ப்போம்.

ஹால்
குறைந்தபட்சமாக 16 x 12 அடி இருக்க வேண்டும். வெளிச்சமும், காற்றோட்டமும் மிக மிக முக்கியம். இந்த அறையில் ஃபிரெஞ்ச் ஜன்னல் வைப்பது நல்ல சாய்ஸ். வெளிச்சம், காற்றோட்டம், வேடிக்கை பார்ப்பது அனைத்திற்கும் இது உதவும்.
வீட்டின் வெளியே இருந்து உள்ளே நுழைந்ததுமே இந்த அறை இருப்பது நல்லது.
சோபா, ஏ.சி, லைட்டுகள், ஷோ கேஸ், ஊஞ்சல், திவான் படுக்கை, கலை படைப்பு மற்றும் அலங்கார வேலைப்பாடுகள், போல என்னென்ன ஹாலில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதற்கெல்லாம் சேர்த்து இடம் இருப்பதுப்போல பிளான் செய்துகொள்ளுங்கள்.
சமையலறை, டைனிங் ஹால், பெட் ரூம், பூஜையறை, படிக்கும் அறை என அனைத்து அறைகளுக்கும் எளிதாக செல்லதக்க வண்ணம் இந்த அறை அமைத்து இருக்க வேண்டும். சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், இந்த அறை வீட்டின் முக்கிய அம்சமாகவும் நடுநாயகமாகவும் இருக்க வேண்டும்.
மேலும் அழகு சேர்க்க அலங்கார மின் விளக்குகள், சரவிளக்கு (chandelier), தொங்கும் விளக்குகள் (hanging lights), சுவர் விளக்குகள்(wall lights) மற்றும் கவன விளக்கு (focus lights) அமைக்கலாம்.
சமையலறை
இந்த அறை U அல்லது L வடிவில் அமைந்திருப்பதும், தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசை நோக்கி இருத்தல் நல்லது. சமைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு, சமைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு என தனித்தனியாகவும், கொஞ்சம் விசாலமாகவும் இடம் இருக்க வேண்டும்.
சமையலறை மேடை (kitchen working slab) 2 அடி 8 இன்ச்சிலிருந்து 3 அடி உயரத்திற்கு இருக்க வேண்டும். காற்றோட்டம் அவசியம். சமையலறை மேடைக்கு மேலேயும், கீழேயும் சமையலுக்கு தேவையான சாமன் மற்றும் உபகரணங்கள் வைக்க ஸ்டோரேஜுகளுக்கான இடம் இருக்க வேண்டும்.
சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது சிம்னியை மற்றும் சிறிய மின்விசிறி கட்டாயம் அமைத்துவிடுங்கள். இது உங்களை வேர்க்க விருவிருக்க சமைப்பதில் இருந்து தப்பிக்க வைக்கும்.
இந்த அறையில் வெளிச்சத்திற்கு தேவையான டியூப் லைட் மற்றும் சுவர் விளக்குகளை அமைக்க வேண்டும்.

பூஜை அறை
கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். வீட்டின் அமைதியான இடத்தில் பூஜை அறை அமைந்திருப்பது சிறந்தது. சிறிய விளக்கு மற்றும் அலங்கார விளக்குகள் மாட்டலாம்.
டைனிங் அறை
சமையலறைக்கு பக்கத்திலேயே இருக்க வேண்டும்.
இந்த அறை செவ்வக வடிவில் அமைந்திருப்பது நல்லது. டைனிங் டேபிளுக்கு தேவையான இடம் இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் மற்றும் இயற்கையான வெளிச்சம் இந்த அறையில் வருமாறு இருந்தால் நல்ல ஃபீல் கிடைக்கும்.
வெளிச்சத்திற்கு வேண்டிய போதிய மின் விளக்குகள் வேண்டும்.
பெட் ரூம்கள்
குறைந்தபட்சமாக 12 x 10 அடி இருக்க வேண்டும்.
கட்டில், அலமாரி, புதிய மற்றும் பழைய துணிகளை வைக்க என போதுமான இடம் இங்கே வேண்டும். வெளியில் இருந்து அறையை பார்த்தால் கட்டில் தெரியாதவண்ணம் அமைத்தல் வேண்டும்.
இந்த அறையில் ஒரு சிறிய மேஜை, நாற்காலி, மேஜை விளக்குடன், இன்டர்நெட் வைஃபை வசதியுடன் சின்ன ரீடிங் ஸ்பேஸ் இருந்தால் சூப்பர்.
டியூப் லைட், இரண்டு சுவர் விளக்கு, பாத நடை (foot lamp) விளக்கு இருந்தால் லுக்காக இருக்கும்.

கழிவறை
குறைந்தபட்சம் 4 x 7 அடி இருக்க வேண்டும். இந்தியன் அல்லது வெஸ்டர்ன் கழிப்பிடத்திற்கு (water closet) தேவையான இடம் இருக்க வேண்டும்.
இதை தாண்டி வாஷ்பேசினுக்கும், குளிப்பதற்கும் போதுமான இடம் வேண்டும்.
தரையிலிருந்து 7 அடி உயரத்திற்கு சுவற்றில் டைல்ஸ் ஒட்டியிருப்பது நல்லது. இது சுவற்றை சுத்தம் செய்யவும் பளபளவென வைக்க எளிதாக இருக்கும்.
பாதுகாப்பு காரணத்திற்காக கழிவறைகளில் Anti - Skid டைல்ஸ்களை பயன்படுத்துங்கள்.
கழிவறை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைக்கவும், டைலய்ட்ரீஸ் வைக்கவும் தனித்தனி இடமாக சுவற்றில் அல்லது வாஷ்பேசின் கீழ் ஒரு இடத்தை அமைக்கலாம்.
ஒரு நடு விளக்கு, ஒரு சுவர் விளக்கு, ஒரு வாஷ் பேசின் விளக்கு, எக்ஸாஸ்ட் ஃபேன், சவரம் செய்யும் மின் சாதன பொருத்த வசதி என அனைத்தும் கழிவறையில் இருந்தால் உங்களுக்கு டபுள் ஈசியாக இருக்கும்.
படிகள்:
ஒவ்வொரு படியும் (raiser) 6 இன்சிற்கும் மேலே இருக்கக்கூடாது. படிகளின் அகலம் (breadth) 3 அடி 3 இன்ச், கால் வாய்ப்புகள் (tread) 10 இன்ச், இருக்க வேண்டும்.
மாடி படிக்கட்டுகள் இடையே படிகட்டின் தரையிறக்கம் மற்றும் தளம் (landing space) ஒவ்வொரு 10 படிக்கு ஒன்று இருப்பதுப்போல அமைத்து கொண்டால், படி ஏறி இறங்கும்போது கால்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
வலுவான கைபிடி (handrail) கட்டாயம் வேண்டும். மின்சாரம் இல்லாதப்போதும், படியில் ஏறி, இறங்க அந்த இடத்தில் இயற்கை வெளிச்சம் ஊடுறுவதுப்போல கட்டப்பட்டிருக்க வேண்டும்.

போர்டிகோ
அமர்ந்து ரிலாக்ஸ் செய்ய போதுமான இடம் இருக்க வேண்டும்.
டூ வீலர், கார், இதர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், காலணிகள், குடைகள், கைதடி வைப்பதற்கான இடம். செடிகள் வளர்ப்பதற்கு போதிய இடம்.
உங்களிடம் செல்லப்பிராணி, ஊஞ்சல் இருந்தால் அதற்கான இடம் என இருக்க வேண்டும்.
மொட்டை மாடி
வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும், எல்லா பருவ நிலை மாற்றங்களையும் சமாளிக்க உதவும் வெதர் ஃப்ரூப் லேயருடன் களிமண் டைல்ஸ் போட்டுக் கொள்ளலாம்.
இதையும் தாண்டி, உங்கள் ரசனைக்கேற்ப வீட்டின் முன் வடிவமைப்பு மற்றும் முகப்புக்கு தேவையான மின் விளக்குகள், வண்ண பெயின்டிங், அலங்கார வெளிக்கதவு, ஜன்னல், இரும்பு கேட், வெளிப்பூச்சு, சுற்றுச்சுவர், சுற்றுச்சுவர் மின்விளக்குகள் போன்றவற்றை பக்காவாக பிளான் செய்து நடைமுறைப்படுத்தி விடுங்கள்".
ஹேப்பி ஹோம்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
