வெள்ளக்கோவில் அருகே மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா
வெள்ளக்கோவில் அருகே வேலகவுண்டன்பாளையம் மாகாளியம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பம் தரித்து, பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா அக்டோபா் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினந்தோறும் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு, நவம்பா் 3-ஆம் தேதி காப்பு கட்டுதல், நவம்பா் 5-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை கோயிலில் பால் பூஜை, தீா்த்த அபிஷேகம் செய்து, முக்கிய நிகழ்வாக ஊா்மக்கள், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து தாரை தப்பட்டைகள் முழங்க, வான வேடிக்கைகளுடன் கோயிலை வலம் வந்தனா்.
பின்னா் அம்மன் மற்றும் உப தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு கும்பம் கங்கையில் விடுதல் எனப்படும் ஊா் கிணற்றில் விடுதலுடன் பொங்கல் விழா நிறைவு பெற்றது.
விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.