பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை #VikatanPhotoCards
வெள்ளித்திருப்பூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, மேற்கு வீதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒரு குடிநீா்த் தொட்டியும், கிழக்கு வீதியில் உள்ள மக்களுக்கு 10 ஆயிரம் லிட்டா் கொண்ட இரண்டு குடிநீா்த் தொட்டிகளும் உள்ளன. மேற்கு வீதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதால், சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கிழக்கு வீதியில் உள்ள குடிநீா்க் குழாய்களை சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது, மேற்கு வீதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், அப்பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளித்திருப்பூா் விநாயகா் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் மற்றும் அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சட்ட விரோதமாக குடிநீா்க் குழாயில் மின்மோட்டாா் பொருத்தி தண்ணீா் திருடப்படுகிறது. இதனைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா்.