வேங்கைவயல் வழக்கு: ’சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்!’ - கோரிக்கை வைக்கும் பெ.சண்முகம்
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று மூன்றாண்டுகள் நெருங்கும் நிலையில், இன்னும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதற்கிடையில், 4 - க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, பலரிடம் குரல் மாதிரி சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மூன்று பேர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிபிஐ (எம்) கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ‘இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி, அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
”புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்ற வாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சி.பி.ஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது” என்று வலியுறுத்தியுள்ளார்.