செய்திகள் :

ஆந்திரா to அமெரிக்கா: ஈஷா மீது அதிகரிக்கும் பாலியல் புகார்கள் - தீவிரமடையும் விசாரணையும், விளக்கமும்

post image

கோவை ஈஷா யோகா மையம் பிரமாண்ட ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது. மறுபக்கம் ஈஷா யோகா மையத்தின் பாலியல் புகார்கள் நீதிமன்றம் வரை சென்று தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கெனவே ஈஷா அவுட் ரீச் மருத்துவர் சரவணமூர்த்தி 12 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்தப் புகாரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்நிலையில் ஈஷா நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்தவரும், ஈஷா மையத்தின் முன்னாள் தன்னார்வலருமான ஒரு பெண் தன் மகனுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அந்தப் பெண்ணிடம் பேசியபோது, “எனது மகனுக்கு 2019ம் ஆண்டில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஆன்லைனில் புகாரளித்திருந்தேன். அதற்கு காவல்துறையில் இருந்து அழைத்து விசாரணை நடத்தினார்கள். காவல்துறையிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன். அங்கு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளோம். நாங்கள் சத்குரு ஜக்கி வாசுதேவை கண்மூடித்தனமாக நம்பினோம். அந்தப் பள்ளியில் நானும் தன்னார்வலராக பணியாற்றினேன். அவருக்கு பலமுறை மெயில் அனுப்பியும் பதில் இல்லை. முதலில் இந்தப் பிரச்னை எங்களுக்கு மட்டும் தான் நடந்துள்ளதாக நினைத்தோம்.

பாலியல் புகார்

அதன்பிறகு தான் இதேபோல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் தெரிந்தது. பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நியாயமாக தகவல் தெரிந்தவுடன் பள்ளி முதல்வரே காவல்துறையில் புகாரளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதை ஒரு விசயமாகவே கருதாமல் காவல்துறைக்கும் செல்ல முடியாது என்கிறார். இதை புகாராக எழுப்பிய காரணத்துக்காக எங்களை பள்ளியில் இருந்து வெளியேற சொன்னார்கள்.

ஆசிரியருக்கு பாலியல் துன்புறுத்தல்

2018ம் ஆண்டு சுவாமி விபு என்பவர் அந்தப் பள்ளியின் முதல்வராக இருந்தார். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு உடற்கல்வி ஆசிரியருக்கு (ஆண் ஆசிரியர்) பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். விபு இப்போதும் அந்தப் பள்ளியில் இருக்கிறார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறார் என தெரிந்தும் அவரை பள்ளி மாணவர்கள் அருகே எப்படி அனுமதிக்கிறார்கள். அவர்களின் வளாகத்தில் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு போதுமான ஆவணங்கள் உள்ளன. பள்ளி நிர்வாகமே அந்த சம்பவம் நடைபெற்றதை மெயில் மூலம் உறுதி செய்துள்ளனர். குழந்தைகளின் அந்தரங்க பாகத்தை தொடுவது மிகவும் சாதாரணமான ஒன்று என்கிறார்கள். அங்கு குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு யார் பொறுப்பேற்பது. ஒரு காலத்தில் சத்குரு எங்களையும் மூளைச்சலவை செய்து கொண்டிருந்தார்.

ஜக்கி வாசுதேவ்

தற்போது அதில் இருந்து வெளிவந்துவிட்டோம். அவர் நாட்டின் பிரதமர் தொடங்கி அதிகாரவர்க்கத்துடன் தொடர்பில் இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்தப் பிரச்னையை பேசியதில் இருந்து எங்கள் வீடு மீது கற்களை வீசுகிறார்கள். எங்களைப் பற்றிய தவறான தகவல்களை பரப்ப முயற்சி செய்கிறார்கள். நான் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கட்டும். அதேநேரத்தில் இந்த வழக்கில் நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள். எங்களுக்கு நீதி வேண்டும்.” என்றார்.

அமெரிக்கா மாணவி

அதே பள்ளியில் படித்த அமெரிக்காவைச் சேர்ந்த மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது, “நாங்கள் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது பணி நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கிறோம். கணவன் – மனைவி இருவருமே நீண்ட காலமாக ஈஷாவில் தன்னார்வலர்களாக இருந்தோம். அடிக்கடி ஈஷா ஆசிரமம் செல்வோம்.

சிறுமி பாலியல் வன்கொடுமை

சத்குரு ஜக்கி வாசுதேவ் கண் மூடித்தனமாக நம்பி அவர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருந்தோம். எங்கள் மூத்த மகள் 2008 -10 வரை ஈஷா பள்ளியில் சேர்த்தோம். எங்கள் வாழ்க்கையை ஈஷாவுக்கும், ஜக்கி வாசுதேவுக்காக அர்ப்பணித்து கோடிக்கணக்கில் செலவு செய்தோம். எங்கள் இளைய மகளை ஈஷா சம்ஸ்க்ரிதி குருகுலத்தில் சேர்க்க முடிவு செய்தபோதுதான் மூத்த மகள், ‘வேண்டாம். அது பாதுகாப்பான இடம் இல்லை. நான் படிக்கும்போதே பாலியல் சீண்டல்கள் நடந்தன.’ என்று கூறினார். எங்களுக்கு அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போட்டது.  இந்த சம்பவத்தை அண்மையில் தான் கூறினார்.

உடற்கல்வி ஆசிரியர்கள் சக்தி, மாரிமுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பள்ளியில் ஒரு செமஸ்டருக்கு 2 இரவு, 3 பகல் மட்டுமே குழந்தைகளை பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி உண்டு. நான்காவது செமஸ்டரில் மகளுக்கு பிடிக்கவில்லை என்பதால் நாங்கள் அந்தப் பள்ளியில் இருந்து விலகிவிட்டோம். அப்போது மகளுக்கு 8 வயதுதான் ஆகியிருந்தது. இதுகுறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அதேநேரத்தில் பள்ளியில் இருந்த ஊழியர்களிடம் சொல்லியுள்ளார். அவர்கள் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

ஜக்கி வாசுதேவ்

மலை போல நம்பினோம்

நாங்களும் தொடர்ந்து ஈஷாவுடன் பயணித்ததால் சந்தேகம் ஏற்படவில்லை. ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரின் உதவியாளர் செந்தில் கன்னியப்பனிடம் புகார் கூறினோம். ஜக்கி வாசுதேவ் நீதி கொடுப்பார் என்று மலை போல நம்பினோம். ஆனால் அவர்கள் எங்களை தவறாக பேசி ஈஷாவை விட்டே வெளியேற்றிவிட்டனர். பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் உள்பட அனைவரையும் ஈஷாவும், ஜக்கி வாசுதேவும் மூளைச் சலவை செய்து வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அதையும் மீறி அவர்கள் புகாரளித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து மிரட்டுகிறார்கள். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன் வருவதில்லை. காவல்துறை இதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.

ஈஷாவின் அழுத்தம் காரணமாக..

இதுகுறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசியபோது, “12 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஈஷா மருத்துவர் சரவணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தான் காவல்துறை மேற்கொண்டு அவர்களின் வாகனம் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஈஷா ஆசிரமத்தில் இருந்த டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். இந்தப் புகாருக்காக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

பியூஷ் மானுஷ்

ஆனால் ஈஷாவின் அழுத்தம் காரணமாக அந்தப் பெண் புகாரை வாபஸ் வாங்கிவிட்டார். ஆந்திரா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பேர் புகாரளித்தும் காவல்துறை வழக்கு கூட பதியவில்லை. சட்டம் தன் கடமையை செய்தால் இதேபோல பாதிக்கப்பட்ட பலரும் புகாரளிக்க முன் வருவார்கள். காவல்துறை தங்கள் கடமையை செய்வதில்லை.

அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கு, கொல்கத்தா பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள்  கைதாகிவிட்டனர். 18 வயதைக் கடந்தவர்களின் வழக்கு அவ்வளவு தீவிரமாக விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்குகிறார்கள். ஈஷா வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள். பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கொடுக்க வேண்டாமா. ஈஷா ஜக்கி வாசுதேவ் பிரதமர், ஜனாதிபதி வரை செல்வாக்கு படைத்தவர்.

ஈஷா யோகா மையம்

லட்சக்கணக்கானோர் அவரை பின் தொடர்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடி பணம், நிலம் புரள்கிறது. அதையும் மீறி அவர்கள் மீது புகாரளிக்க முன் வருகிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துகிறார்கள். அதை பயன்படுத்தி ஈஷாவும், ஜக்கி வாசுதேவும் அவர்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து புகாரளித்தவர்களை பின் வாங்க வைக்கிறார்கள். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்த இரண்டு புகார்கள் மீதான விசாரணை கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈஷா யோகா மையம் மீதான பாலியல் புகார்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணையில் காவல்துறை, “குற்றம் அண்மையில் நடைபெற்றிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

ஆனால் இந்த சம்பவங்கள் நடைபெற்று நீண்ட காலம் ஆகிறது. அதனால் அனைத்து தகவல்களையும் முறையாக விசாரிக்க வேண்டியுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பான 2 புகார்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளனர்.

டி.எஸ்.பி விளக்கம்

இதுகுறித்து பேரூர் டி.எஸ்.பி சிவக்குமாரிடம் பேசியபோது, “ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் பாதிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் புகாரளித்தனர். பொதுவாக ஆன்லைனில் புகாரளித்தால் அடுத்த 3 நாள்களில் நேரில் ஆஜராகி புகாரளிக்க வேண்டும். அவர்கள் இன்னும் வரவில்லை. இந்தப் புகார் குறித்து ஈஷா தரப்பிலும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளோம்.

தமிழக காவல்துறை

சம்பவம் நடைபெற்று நீண்ட நாள்களாகிவிட்டன. புகார் தாமதமாக வந்துள்ளது.. இதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்றும் விசாரிக்கிறோம். விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

இந்தப் புகார்கள் குறித்து ஈஷா யோகா மையம் தரப்பில் விளக்கம் கேட்டோம். எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டுமே நம் கேள்விகளை அவர்களிடம் முன்வைத்திருந்தோம்... இனி நம் கேள்விகளுக்கு அவர்களின் பதில்கள் கீழே...

``பெண் ஒருவர் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) தனது மகனுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகவும், இதுகுறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ், பள்ளி நிர்வாகத்திடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் வைத்துள்ளாரே.?”

``2019-ஆம் ஆண்டு இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு மாணவரின் முரட்டுத்தனமான செய்கைகளும், மிரட்டல் போக்கும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து பேசிய பின்பு, பெற்றோர் அந்த மாணவரை பள்ளியிலிருந்து விலக்கி கொண்டனர்.

​இந்த சம்பவத்திற்கு பிறகு அப்பெண்ணின் மகன் அதேப் பள்ளியில் 3 ஆண்டுகள் வரை படித்து, வெற்றிகரமாக பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறினார். இதனுடன் அவர்களின் இரண்டாவது மகனையும் அதே பள்ளியில் சேர்க்க கோரி விண்ணப்பம் அளித்து இருந்தனர். மேலும் அவர், அவரின் மகன் பள்ளிக் கல்வி முடித்து வெளியேறிய பின்னர், அதே பள்ளியில் தன்னார்வலராக சேர்ந்தார்.

தன்னுடைய மகனுக்கு கசப்பான சம்பவம் ஏதேனும் (அவர் கூறுவது போன்ற) நடைபெற்றது தெரிந்த பின்னரும்,அதே பள்ளியில் அடுத்த 3 ஆண்டுகள் தொடர்ந்து படிக்க எந்த பெற்றோராவது அனுமதிப்பார்களா?

அதே பள்ளியில் தனது இரண்டாவது மகனை சேர்க்க எந்த பெற்றோராவது விண்ணப்பம் அளிப்பார்களா?

அதே பள்ளியில் எந்த பெற்றோராவது தன்னார்வ தொண்டு செய்ய சேர்வார்களா?

அப்பெண் தன்னார்வ தொண்டு செய்த காலத்தில் அவரின் மீது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து பல புகார்களை அளித்து வந்ததன் அடிப்படையில் “அவர் பள்ளியை விட்டு கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.” பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு விட்ட அதிருப்தியில் அவர் பல்வேறு மக்களைத் தொடர்பு கொண்டு தவறான குற்றச்சாட்டுகளால் ஈஷா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேற்கூறிய தகவல்களில் இருந்து புகார் சொல்லும் பெண் அவர்களின் குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட உள்நோக்கத்துடன் திட்டமிட்டு புனையப்பட்ட அவதூறுகள் என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்"

ஈஷா யோகா மையம்

``அப்பெண்ணின் புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். மறுபக்கம் அவர்கள் குற்றம் சாட்டும் நபர் இன்னும் பள்ளியில் இருக்கிறார் என்ற புகார் உள்ளதே?”

அவர் கூறும் குற்றச்சாட்டுகளே தவறான உள்நோக்கம் கொண்ட அவதூறுகள் என்று கூறிவிட்ட பின்னர் இந்த கேள்விக்கான அவசியம் ஏதுமில்லை.

``மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின்(பெயர் தவிர்க்கப்படுகிறது) மகளுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக காவல்துறையில் புகாரளித்துள்ளனரே?”

``அமெரிக்காவை சேர்ந்த தம்பதியின் மகள் 2008-ஆம் ஆண்டு ஈஷா ஹோம் ஸ்கூலில் சேர்க்கப்பட்டார். பின்பு 03-04-2010 அன்று பள்ளி நிர்வாகத்திற்கு அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், “எங்கள் மகளை அக்கறையுடன் சிறந்த முறையில் கவனித்துக் கொண்டதற்கு நன்றி, பொருளாதார சிக்கல்கள் இருப்பதால் மகளை பள்ளியில் இருந்து விலக்கி கொள்கிறோம்” எனக் கூறி இருந்தனர்.

இதன் பிறகு 2011, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், மீண்டும் அதே பள்ளியில் மகள் பயில விரும்புவதாக கூறி பள்ளியில் சேர்க்க அவர்கள் முயற்சி செய்தனர். இது தொடர்பாக அவர்களின் மகள் எழுதிய சில மின்னஞ்சல்களையும் பள்ளி நிர்வாகத்திற்கு அவர்கள் அனுப்பி இருந்தனர். அதில் ஈஷா ஹோம் ஸ்கூலில் தன்னுடைய அனுபவம் அற்புதமாக இருந்ததாலும், அமெரிக்க பள்ளிகளில் சரியான கவனிப்பு கிடைக்காததாலும், ஈஷா ஹோம் ஸ்கூலில் மீண்டும் வந்து சேர்வது தனக்கு எந்த அளவிற்கு தேவையானது என்பது குறித்து அவர்களின் மகள் விவரித்து இருந்தார்.

“தன்னுடைய மகளுக்கு கசப்பான சம்பவம் நடைபெற்ற அதே பள்ளியில் மீண்டும் சேர்க்க எந்த பெற்றோராவது தொடர்ச்சியாக முயற்சி செய்வார்களா?” “தனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு இருந்தால் அதே பள்ளியில் மீண்டும் சேர எந்த பெண் குழந்தைகளாவது விரும்புவார்களா?”

இதனிடையே அத்தம்பதியினர் ஆன்மிகப் பாதையில் செல்வதில் ஆர்வமாக இருப்பதாக கூறியதால் அமெரிக்காவில் உள்ள ஈஷா மையம் அருகே குடியேற அவர்களுக்கு ஈஷா உதவியது. ஆனால் அவர்களின் நோக்கங்கள் ஆன்மிக ரீதியில் இல்லாமல் முற்றிலும் வணிக நோக்கத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்ததாலும், இருவரின் நடத்தை குறித்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருந்ததாலும் இருவரும் ஆசிரமத்துடன் எந்த வித தொடர்பிலும் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் “ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகளில் இருந்து அவர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டனர்.”

மேலும் அத்தம்பதியில் கணவரின் வன்முறை நடத்தை காரணமாக மனைவி அவரிடமிருந்து சட்டப் பாதுகாப்பைக் கோரி அமெரிக்காவில் நீதிமன்றம் வரை சென்றார். இதன் விளைவாக டென்னிசியில் உள்ள ‘வாரன் கவுண்டி நீதிமன்றம்’ அப்பெண் மற்றும் அவர் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கணவர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்து அவர்களின் பாதுகாப்பிற்கான உத்தரவை (Order for Protection) வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் மீது தொடர்ந்து வந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஈஷாவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தற்போது 17 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக கூறுவது, அவர்களின் தவறான உள்நோக்கத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேட்டு பெற முயற்சிக்கும் உங்கள் நோக்கத்தை பாராட்டுகிறோம், அதே நேரத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நபர்களின் பின்னணி மற்றும் வரலாறு குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டியது ஒரு புலனாய்வு பத்திரிக்கையின் தார்மீக கடமை மற்றும் தர்மம் என்பதை தங்களுக்கு நினைவுக் கூற விரும்புகிறோம்.”

``2021ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பூஜா என்பவர் ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்காக வந்திருந்தபோது ஈஷா வளாகத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக நவன் என்பவர் மீது புகாரளிக்கப்பட்டு டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து பிறகு அது கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பிறகு அவர் தன் புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஈஷா அழுத்தம் காரணமாகதான் அவர் புகாரை வாபஸ் வாங்கியதாக பியூஷ் மானுஷ் குற்றம் சாட்டியுள்ளார். ஈஷா மையத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்துதான் ஏற்கெனவே நீதிமன்றம் வரை கேள்வி எழுப்பப்பட்டது. அப்படியிருக்கும்போது யோகா பயிற்சிக்கு வந்த பூஜாவுக்கும் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டியது உங்கள் தார்மீக கடமை அல்லவா. இதை அவர்களின் பிரச்னை என்று நீங்கள் கூறினாலும், சம்பவம் நடைபெற்றது ஈஷா வளாகத்தில் என்பதால் அங்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் உங்களின் கடமை தானே?"

``இந்த குற்றச்சாட்டிற்கும் ஈஷா அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்,

இந்த சம்பவம் ஈஷாவில் இருக்கும் தங்கும் அறைகளில் பணம் செலுத்தி தங்கி சென்ற இரண்டு தனிநபர்களுக்கு இடையே நடைபெற்றுள்ளது.

மேலும் இது ஒருவருக்கொருவர் முன்பே அறிமுகமான நண்பர்களுக்குள் இடையே நடைபெற்ற தனிநபர்கள் சார்ந்த பிரச்சினை. ​

அந்த பெண் தன்னுடைய புகாரிலோ அல்லது வேறெந்த இடத்திலோ ஈஷாவில் பாதுகாப்பு இல்லை என்றோ, அதனால் தான் தனக்கு இப்படி நடந்தது என்றோ கூறவில்லை.

இவ்வாறு இது ஏற்கனவே அறிமுகமான இரு நண்பர்கள் சார்ந்த பிரச்சினையாக இருப்பதாலும், இதில் அந்த பெண் ஈஷா மீ து எந்த குற்றச்சாட்டும் கூறாத நிலையில் அவரின் புகாரை திரும்ப பெறக் கூறி அழுத்தம் தர வேண்டிய எந்த கட்டாயமோ, அவசியமோ எங்களுக்கு இல்லை.

அதையும் தாண்டி ஒருவர் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை அத்துமீறி பார்ப்பது அநாகரீகமான செயல், அதை நாகரீகமானவர்கள் யாரும் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு பத்திரிக்கையாக தங்களுக்கும் தெரியும். மேலும் அந்த இருவருமே ஈஷா யோக மையத்தை சேர்ந்தவர்கள் இல்லை. கூடுதலாக எங்கள் ஆவணங்களின் படி, அந்த புகாரில் இருப்பது போல அவர்கள் ஈஷாவிற்கு யோகா கற்றுக் கொள்ளவோ அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ வரவில்லை. ​

அடுத்ததாக அந்த சம்பவம் நடைபெற்ற பிறகும் கூட அந்த பெண் தங்கியிருந்த நாட்களில் எங்களிடம் இது குறித்த எந்த புகாரினையும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து அவர் இன்னொரு தனிநபர் மீது மட்டுமே டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகார் தனிபட்ட ஒரு நபரின் மீதானது, அது நடைபெற்ற இடத்தை குறிப்பதற்காகவே ஈஷாவின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற காவல்துறை விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி இருக்கிறோம். அவர் அளித்த புகாரினை ஏன் திரும்ப பெற்றுக் கொண்டார் என்பது குறித்த எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது. அந்த பெண்ணோ இல்லை அவரை சேர்ந்தவர்களோ புகாரை திரும்ப பெற ஈஷா அழுத்தம் தந்தது என்று எங்கும் கூறவில்லை. முன்னமே கூறியது போல் இது இரு தனிநபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை, இதில் ஈஷா மீ து எந்த குற்றச்சாட்டுகளும், புகார்களும் இல்லை. “அந்த பெண்ணின் புகாரில் ஈஷா மீ து எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை, புகாரை திரும்ப பெற்றதற்கு ஈஷாவின் அழுத்தம் தான் காரணம் என்றும் எங்கும் கூறவில்லை.”

இவ்வாறு அந்த பெண் ஈஷா மீது எந்த குற்றச்சாட்டையும் கூறாத போது யாரோ ஒரு மூன்றாம் நபரின் கேள்விகளை ஒரு பத்திரிக்கையாக நீங்கள் கேட்பது மிகவும் வினோதமாக இருக்கிறது. யார் இவ்வாறு எல்லாம் கூறுகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் முழுநேர பணி என்ன? இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தாலே இது ஈஷாவிற்கு களங்கம் ஏற்படுத்த உண்மையை திரிக்கும் அவர்களின் முயற்சி என்பது தெள்ளத்தெளிவாக தெரியும். தங்களின் சுய லாபங்களுக்காக தொடர்ந்து ஈஷா மீ து அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் தவறான உள்நோக்கம் கொண்ட சில நபர்கள் உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு மிகத் தவறான வழிகாட்டுதல்களையும், தகவல்களையும் வழங்கி வருவது உங்களின் முந்தைய கேள்வி மற்றும் இந்தக் கேள்வி மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

“உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் கேள்விகள் ஏதும் எழுப்பபடவில்லை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிறோம்.”

ஈஷாவில் பல வருடங்களாக இருக்கும் பெண் பிரம்மச்சாரிகள், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பெண்கள், வேலைக்கு வந்து செல்லும் பெண்கள், பள்ளியில் கல்வி பயிலும் பெண் குழந்தைகள் என பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் 2 நாட்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டனர். அதில் அனைவரும் தாங்கள் “பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும்” இருப்பதாகவே கூறியுள்ளனர். இதனை காவல்துறையும் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. “ஈஷா பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பாதுகாப்பான இடமாகவே இருந்து வருகிறது.”

``முதல்கட்டமாக ஈஷா நிர்வாகத்தில் புகாரளித்து நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களை மூளைச் சலவை செய்வது காலம் கடத்துவதாக புகார் கூறுகிறார்கள்.”

``நாங்கள் இதுவரை அளித்துள்ள பதில்களில் இருந்தே ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம், அப்பெண் மற்றும் அமெரிக்க தம்பதி ஆகியோர் மீது “புகார்கள் வந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததால் தான்” அவர்கள் ஈஷாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

அவர்கள் வெளியேற்றபட்ட பிறகே இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்திருந்தால் அது தெரிந்த போதே, ஈஷாவில் இருந்து வெளியேறி குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறி இருக்கலாமே? ஆனால் தற்போது அவர்களை வெளியேற்றபட்ட அதிருப்தி மற்றும் வன்மம் காரணமாக இது போன்ற அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சத்குரு மற்றும் ஈஷாவின் நற்பெயருக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று சில தனிநபர்கள் மற்றும் ஒரு சில அமைப்புகள் பல்வேறு வகைகளில் கடந்த 30 வருடங்களாக முயன்று வருகிறார்கள். அந்த வகையில் ஈஷாவில் இருந்து வெளியேற்றபட்டவர்களை கொண்டு மீண்டுமொரு முயற்சியை, அவர்கள் கையில் எடுத்து இருக்கிறார்கள். கூட்டுசதியாக

நடைபெறும் இந்த தீய செயல்களுக்கு விகடன் போன்ற பத்திரிகைகள் துணை போக கூடாது. நாங்கள் மேற்கூறிய அனைத்து தகவல்களுக்கும் முறையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதனை நாங்கள் சட்டபூர்வமாக அணுக உள்ளோம்.”

ஈஷா | அதிகாரிகள் ஆய்வு

``புகார் சொல்லும் தரப்புக்கு ஈஷா மிரட்டல் விடுவதாகவும்கூறுகிறார்களே?”

``இது முற்றிலும் அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டு. எங்கள் பக்கம் உண்மை இருக்கையில் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

அமெரிக்க நபர் அமெரிக்காவில் கடந்த ஆண்டு (2023) குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஆபத்து இருக்கிறது என்று அமெரிக்காவில் நீதிமன்றம் வரை சென்று பாதுகாப்பு பெற்றவர் தான் அவரின் மனைவி. அவர்கள் மாற்றி மாற்றி பேசுவதையும், சுய லாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் என்பதை அவர்கள் குறித்து நீங்கள் ஆய்வு செய்து பார்த்தாலே புரியும்.”

குடியரசு தினத்தில் அதிர்ச்சி கொடுத்த இலங்கை... 3 படகுகளுடன் 33 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 439 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் சிலர் தனுஷ்கோடி - மன்னார் இடையிலான பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மீன்பிடித்... மேலும் பார்க்க

தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்‌ கைது!

தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தென்காசி மாவட்ட தனிப்படை போலீஸ் கைது செய்தது. இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "கடந்த சில வாரங்களுக்... மேலும் பார்க்க

வேங்கை வயல் வழக்கு: 2-வது நாளாக மக்கள் போராட்டம்; கிராமத்தை சுற்றி சோதனைச்சாவடி, போலீஸார் குவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு: மெத்தனமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்துார்: தங்க நகை திருட்டு; உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விற்பனை... 3 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துடியாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாண்டியராஜ்- கமலா (வயது 48) தம்பதியினர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். பாண்டியராஜ் தூத்துக்குடி மாவட்டம் கயத்த... மேலும் பார்க்க

வேங்கைவயல்: போராட்டம் நடத்த முயன்ற விசிக-வினர் கைது; போலீஸ் குவிப்பு; களநிலவரம் என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்ப... மேலும் பார்க்க