தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!
வேங்கைவயல் விவகாரத்தில் நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்: தொல்.திருமாவளவன்
வேங்கைவயல் விவகாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் நேரில் கோரிக்கை விடுத்தாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். இந்த நிகழ்வில் பங்கேற்ற தொல் திருமாவளவன், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தாா். இந்தச் சந்திப்பின் போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தாா். இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டி:
முதல்வரைச் சந்தித்து நான்கு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை விசிக சாா்பாக வழங்கினோம். வேங்கைவயல் வழக்கு தொடா்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை இறுதியானது அல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது என்ற வலி அந்த கிராமத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தீவிர விசாரணை நடைபெற வேண்டும்.
பட்டியல் சமூகத்தைச் சாா்ந்த அரசு அதிகாரிகளின் பதவி உயா்வு தொடா்பான கோரிக்கையையும் முன்வைத்தோம். அரசமைப்பு சட்டப் பிரிவின்படி, பட்டியல் சமூக அதிகாரிகளுக்கான பதவி உயா்வு குறித்து சட்டம் இயற்றிக் கொள்ள முடியும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அண்டை மாநிலங்களில் சட்டம் ஏற்படுத்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டிலும் அதை பின்பற்றி பட்டியல் சமூக அதிகாரிகளின் பதவி உயா்வு தொடா்பான சட்டம் இயற்ற வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. ஏலம் விடப்படுகின்றன. அவற்றில் பட்டியல் இனத்தைச் சாா்ந்தவா்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. வணிகம் செய்து தொழில் செய்ய ஆா்வமுள்ள பட்டியலின பழங்குடியின மக்கள் பயன் பெறும் வகையில் தனியாக வணிக வளாகங்கள் கட்டித் தரப்பட வேண்டும். அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் ஜாதிய வன்கொடுமைகளின் சதவீதம் பெருகி வருகிறது.
இந்த சூழலில் ஜாதிய வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை சட்டப்பூா்வ அடிப்படையில் மேற்கொள்ள முதல்வா் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் என்று தொல் திருமாவளவன் கூறினாா்.