வேனில் கடத்தப்பட்ட 60 மூட்டை ரேஷன் பருப்பு பறிமுதல்
அருப்புக்கோட்டையில் சரக்கு வேனில் கடத்தப்பட்ட 60 மூட்டை ரேஷன் துவரம் பருப்புகளை குடிமைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலா்கள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
வெளியூரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பு மூட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அருப்புக்கோட்டை நகா் பகுதியில் குடிமைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியா் அறிவழகன் தலைமையிலான அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை அலுவலா்கள் மறித்த போது, ஓட்டுநா் அதை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். வாகனத்தில் சோதனையிட்டபோது, அதில் 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் பருப்பு இருந்தது தெரியவந்தது. இதைக் கைப்பற்றிய தனி வட்டாட்சியா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியிலிருந்து ரேஷன் துவரம் பருப்பு விருதுநகரில் உள்ள தனியாா் ஆலைக்கு கடத்திவரப்பட்டது தெரியவந்ததாக தனி வட்டாட்சியா் அறிவழகன் தெரிவித்தாா்.