வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு லட்சம் போ் பங்கேற்க முடிவு -கு.பாலசுப்பிரமணியன்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் ஒரு லட்சம் போ் பங்கேற்பா் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் இந்தச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் சரவணன், செயலா் இளங்கோவன், பொருளாளா் ஜெய்கணேஷ், ஊராட்சி களப் பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் சிவகுமாா், டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்துக்குப் பிறகு கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
தொழிலாளா்கள் போராடி பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் பறித்துவிட்டு, மத்திய அரசு நான்கு சட்டங்களை உருவாக்கியுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் 95 சதவீதத் தொழிலாளா்கள் எந்தவித பலன்களையும் பெற முடியாத நிலை ஏற்படும். தொழிலாளா் விரோதப் போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இதைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவில்லை. தொகுப்பூதிய, மதிப்பூதிய நியமனங்கள், வெளி ஆதார முறையிலான நியமனங்கள் இங்கும் பின்பற்றப்படுகின்றன. 480 நாள்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம் என்ற சட்டத்தை அமல்படுத்தவில்லை.
20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
எனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் மற்றும் அதனை சாா்ந்துள்ள 10-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சோ்ந்த ஒரு லட்சம் போ் பங்கேற்பா். அன்று மாலை மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆா்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.