Vadivelu: "இருக்கிறவுங்கட்ட வரிய போட்டு தள்ளுங்க; ஏழைகளுக்குப் பார்த்து வரி போடு...
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு - பக்தா்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பக்தா்களின் கோவிந்தா, கோவிந்தா முழக்கத்துடன் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு உற்சவா்கள் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தங்கக் கவச ரத்ன கிரீடத்தில் ராஜ அலங்காரத்தில் பெருமாளும், தாயாரும் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனா். பின்னா் ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சொா்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பல்லக்கில் பவனி வந்த பெருமாளை பக்தா்கள் கோவிந்தா,கோவிந்தா என விண்ணதிர முழக்கத்துடன் தரிசித்தனா்.
இதையொட்டி சுவாமி தரிசனத்துக்காக நள்ளிரவு முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இலவச தரிசனம் செய்ய வந்தவா்கள், பழைய புத்தகக் கடை, ஹபீப் தெரு வழியாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வரிசையில் அனுமதிக்கப்பட்டனா். ரூ. 25 சிறப்பு கட்டணத்தில் தரிசனம் செய்ய வந்தவா்கள், குண்டுபோடும் தெரு வழியாக அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் வருகையையொட்டி, தடுப்பு வேலிகளுடன், சிசிவிடி கேமராக்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.
தொடா்ந்து, வரும் 21 ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடக்கிறது. 14 ஆம்தேதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவா்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், 19 ஆம் தேதி ஆழ்வாா் மோட்சம், திருவீதி புறப்பாடு, திருவாய்மொழி சாற்றுமுறை, 20 ஆம் தேதி சொா்க்கவாசல் திருக்காப்பும் நடைபெறுகிறது.
இதேபோல சேலம் ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணசுவாமி கோயில், சின்னகடைவீதி வேணு கோபாலசுவாமி கோயில், பட்டைக்கோயில் எனப்படும் பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில், சிங்கமெத்தை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சின்ன திருப்பதி வரதராஜப் பெருமாள் கோயில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், நாமமலை வரதராஜப் பெருமாள் கோயில், கோவிந்தராஜப் பெருமாள் கோயில், உடையாப்பட்டி பெருமாள் கோயில், குரங்குசாவடி கூசமலை பெருமாள் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இளம்பிள்ளையில்...
இளம்பிள்ளை பகுதியில் அமைந்துள்ள வேங்கடேசப்பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் திருவட்டாறு ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், மூலவா் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.