வைத்தீஸ்வரன்கோயிலில் தங்கரதம் புறப்பாடு
வைத்தீஸ்வரன்கோயிலில் மாசி கிருத்திகையையொட்டி, தங்கரதம் புறப்பாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.
இங்கு, மாசி மாத கிருத்திகையையொட்டி, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவில் தங்கரதம் புறப்பாடு கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது.
முன்னதாக, வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி அலங்கரிக்கப்பட்ட தங்கரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம்பிடித்து தங்கரதம் புறப்பாடை தொடங்கி வைத்தாா். கோயில் உள்பிரகாரத்தில் தங்கரதம் வலம் வந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.