இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
வைத்தீஸ்வரன்கோவிலில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள மீன் மாா்க்கெட்டில் விற்பனைக்கு வைத்திருந்த, 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் மீன் மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
வியாழக்கிழமை மீன் வாங்க வந்தவா்கள், மீன்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக கடைக்காரா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என்.கண்ணன் அங்கு வந்து பாா்த்தபோது, அழுகிய மற்றும் கெட்டுப் போன மீன்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
இதுகுறித்து, வா்த்தக சங்கத் தலைவா் மற்றும் பொதுமக்கள் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலா்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனா். அதன்பேரில், பேரூராட்சி செயல்அலுவலா் அருள்மொழி, பேரூராட்சி தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் மற்றும் போலீஸாா், மீன் மாா்க்கெட்டில் ஆய்வு செய்தனா்.
இதில், கெட்டுப்போன நிலையில் இருந்த ரூ.30,000 மதிப்பிலான சுமாா் 200 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனா். இவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வியாபாரிகளிடம், மீண்டும் இதுபோல் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
மேலும், விற்பனை செய்வதற்கு உரிய உரிமம் பெற்று, அதற்கான சான்றிதழை கடைகளில் வைத்திருக்க வேண்டும் எனவும், மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி அலுவலா் எச்சரித்தாா்.